முடக்கப்பட்ட ஜிஎஸ்டி பதிவை மீண்டும் செயல்படுத்த ரூ.5 ஆயிரம் லஞ்சம்: வணிக வரி அதிகாரி கைது

12

தர்மபுரி: முடக்கப்பட்ட ஜிஎஸ்டி பதிவை மீண்டும் செயல்படுத்தி சான்றிதழ் தர 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வணிகவரி அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சின்னமாட்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (29). இவர் சொந்தமாக சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். 'ஆட்டோமேஷன் கன்சல்டன்ட் ' ஆக தொழில் செய்வதற்காக ஜிஎஸ்டி பதிவு சான்றிதழுக்காக இணைய வழியில் விண்ணப்பம் செய்தார். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு ஜிஎஸ்டி பதிவு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், திடிரென ஜிஎஸ்டி எண் முடக்கப்பட்டது.



இது தொடர்பாக மணிகண்டன், கடந்த 25ம் தேதி பாலக்கோட்டில் உள்ள வணிகவரி அலுவலகத்தில் பணியாற்றும் துணை வணிக வரி அதிகாரி செல்வக்குமாரை சந்தித்தார். அப்போது, ஜிஎஸ்டி சான்றிதழை மீட்டுத் தருவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், தர்மபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.


அவர்கள் அறிவுரையின்படி மணிகண்டன் இன்று மாலை ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை செல்வகுமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான போலீசார் செல்வக்குமாரை கையும் களவுமாக கைது செய்து விசாரணைக்கு பிறகு சிறையில் அடைத்தனர்.


கடந்த 2 மாதங்களில் பாலக்கோட்டில் விஏஓ, இன்ஸ்பெக்டர், போலீஸ், கருவூல அதிகாரி என 4 பேர் லஞ்சம் வாங்கி கைதான நிலையில் தற்போது துணை வணிகவரி அதிகாரி கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement