குடிநீர் சப்ளையின்றி வரி கேட்கும் அவலம் அரண்மனைப்புதுார் திருப்பதி நகர் குடியிருப்போர் குமுறல்

தேனி : தேனி ஊராட்சி ஒன்றியம், அரண்மனைப்புதுார் ஊராட்சி 9வது வார்டான திருப்பதி நகரில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்காமல் சில வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி உள்ளனர். இது தவிர முறையாக இணைப்பு வழங்கிய வீடுகளுக்கும் இதுவரை குடிநீர் வழங்காத நிலையில் மாதாந்திர குடிநீர் வரி செலுத்த கோரி ஊராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகின்றனர். ரோடு, சாக்கடை வசதி இன்றி பல்வேறு பிரச்னைகளால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக திருப்பதி நகர் குடியிருப்போர் ராஜலட்சுமி, வைகைமீனா, நீரார், முத்துலட்சுமி, சரிதா உள்ளிட்டோர் கூறியதாவது:
இந்த பகுதியில் 13 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்புகள் உருவாகின. தற்போதும் பலரும் வீடுகள் கட்டி வருகின்றனர். திருப்பதி நகரில் 5 தெருக்கள் உள்ளன. ஒரு தெருவில் கூட ரோடு அமைக்கவில்லை. இதனால் மழைகாலங்களில்தெருக்களில் தண்ணீர் தேங்கி சகதியாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக டூவீலர்கள், நடந்து செல்பவர்கள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
இப் பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதியும் இல்லை. இதனால் பலரது வீடுகளுக்கு முன் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கும் அவல நிலை தொடர்கிறது. மழைகாலத்தில் சாக்கடை நீருடன் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் பெரும் தொந்தரவு ஏற்படுகிறது. வீடுகளுக்கு குடிநீர் வழங்க கோரி பலமுறை அரண்மனைப்புதுார் ஊராட்சியில் கோரிக்கை வைத்தும் பலனில்லை.
சில தெருக்களில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க பகிர்மான குழாய் பதித்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கி உள்ளனர். சில தெருக்களில் பகிர்மான குழாய் பதிக்காமலே பெயரளவில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கி உள்ளனர். வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் இது வரை குடிநீர் வழங்க வில்லை. அதனால் குடியிருப்போர்கள் போர்வெல் நீரையே பருகும் நிலை நீடிக்கிறது.
சிலர் போர் தண்ணீரை சுத்தம் செய்து பருகினாலும் கூடுதல் செலவிடும் நிலை தொடர்கிறது. குடிநீர் வழங்காமல் தற்போது இணைப்பு வழங்கி உள்ளோம், குடிநீர் கட்டணம் செலுத்துங்கள் என ஊராட்சியில் குடிநீர் வரி கேட்கின்றனர். திருப்பதி நகர் எங்கு உள்ளது என்பதை அடையாளம் காண இதனால் ரோட்டில் வழிகாட்டி பலகை வைத்தோம். அதனை பல்வேறு காரணங்களை கூறி அகற்றிவிட்டனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியார் செங்கல் சூளை செயல்படுகிறது. அதிலிருந்து வரும் புகை குழந்தைகள், முதியோர்களை பாதிக்கிறது. ஊராட்சி சார்பில் வீடுகளில் குப்பை பெற துாய்மை பணியாளர்கள் நியமிக்கவில்லை.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இரவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. தெருவில் போதிய வெளிச்சம் இல்லாததல் பலரும் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி முடித்து வரும் மாணவர்கள், பணிமுடிந்துதிரும்புவோர் பயத்துடன் வீடுகளுக்கு வரும் சூழல் உள்ளது.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி கிராமசபை கூட்டங்கள், ஊராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ரோடு , சாக்கடை, குப்பை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு