டில்லியில் ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா; அஞ்சல் தலை வெளியிட்டார் பிரதமர் மோடி

11


புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று (அக் 01) தொடங்கியது. டில்லியில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை வெளியிட்டார்.


கடந்த 1925ல், மஹாராஷ்டிராவின் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார், ஆர்.எஸ்.எஸ்., என்றழைக்கப்படும், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை துவங்கினார். தன்னார்வலர்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு உள்ளிட்ட பண்புகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் துவங்கி நடைபெற இருக்கின்றன. டில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று (அக் 01) காலை 10.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இதில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.



இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நாட்டிற்கு அளித்த பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

முக்கிய பங்கு



பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பு 100 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது தற்செயலான நிகழ்வு அல்ல. ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுக்கால பயணம் முன்னோடியில்லாதது.100 ஆண்டு கால மகத்தான பயணம் தேசத்தின் வளர்ச்சியை கட்டியெழுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது. ஆர்எஸ்எஸ் என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். நானும் ஆர்எஸ்எஸ் அமைப்பை வேராக கொண்டவன் தான். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement