ஏஐ மூலம் ஆபாச வீடியோ; ரூ.4 கோடி கேட்டு யூடியூப் மீது நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு

8


புதுடில்லி: ஏஐ மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் தம்பதி. இவர்கள் தங்களின் போட்டோக்களை பயன்படுத்தி ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இத்தகைய வீடியோக்கள் யூடியூப் மூலம் பரப்பப்பட்டுள்ளன. இதற்கு காரணமான யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் ரூ.4 கோடி இழப்பீடு கேட்டு ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கடந்த செப்.,6ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது; தங்களைப் பற்றிய அவதூறு வீடியோக்களை முழுதும் நீக்க வேண்டும். அதேபோல, இதுபோன்று ஏஐ மூலம் உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்களை பதிவிடுவதை தடுக்க, யூடியூப் நிறுவனத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக, தங்களின் பெயர்கள், குரல்கள் மற்றும போட்டோக்களை ஏஐயால் தவறாக பயன்படுத்த முடியாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலில் நடிகர்கள் சல்மான் கான், அபிஷேக் பச்சன் நடிகைகள் பூஜா ஹெக்டே, ஐஸ்வர்யா ராய் உள்பட பல பிரபலங்களின் 250க்கும் மேற்பட்ட டீப் பேக் வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்கள் மொத்தம் 1.65 கோடி பார்வைகளைக் கொண்டுள்ளது. இதில், சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்டு இருப்பதை தங்கள் மனுவில் தம்பதி குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement