சேலம், இடைப்பாடி, கூட்டாத்துப்பட்டி, நாமக்கல்லில் இன்று காலைக்கதிர் சார்பில் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்

நாமக்கல், 'காலைக்கதிர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் சார்பில், விஜயதசமி நாளான இன்று, 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி, சேலம், இடைப்பாடி, கூட்டாத்துப்பட்டி, நாமக்கல் ஆகிய இடங்களில் நடக்கிறது.
பிரபல கல்வியாளர்களும், துறை நிபுணர்களும் பங்கேற்று, குழந்தைகள் கைபிடித்து, 'வித்யாரம்பம்' செய்ய உள்ளனர்.

அறியாமை இருளை நீக்கி, பிரகாசமான எதிர்காலத்தை வழங்குவதில் கல்வியின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனாலேயே காலைக்கதிர் நாளிதழ், நடுநிலையான செய்திகளை வழங்குவதோடு நின்று விடாமல், வாசகர் குடும்பங்களுக்கு உதவும், கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஒவ்வொருவரின் குழந்தையும், எதிர்காலத்தில் பிரபலமாகவும், கல்வியாளர்களாகவும் மாற வேண்டும் என்ற கனவு, பெற்றோருக்கு உண்டு. இக்கனவு நிறைவேறுவதற்கான அச்சாரமாக, வெற்றியை தரும் விஜயதசமி நன்னாளில், பிரபலங்களின் கையால், வித்யாரம்பம் செய்து, பெற்றோரை நெகிழச்செய்யும் 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்

சுவடி ஆரம்பம்' எனும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும், 'காலைக்கதிர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.



நடப்பு ஆண்டு, சேலம் மாவட்டத்தில் மூன்று இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு இடத்திலும், இந்நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இன்று நடக்கிறது.
சேலம், பேலஸ் தியேட்டர் எதிரே உள்ள ஏ.வி.ஆர்., கல்யாண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளர்களாக, சேலம் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மான்விழி, சேலம் சங்கீத வித்வித் சபா தலைவர் ஏ.வி.ஆர்.சுகந்தி, டிரெடிசனல் மியூசிக்கல் பவுண்டேஷன் தாளாளர் ஸ்ரீவித்யா, டி.எம்.எஸ்., கண் மருத்துவமனை நிர்வாகி லட்சுமி சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்று, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய உள்ளனர்.
இடைப்பாடி யுனிவர்சல் பப்ளிக் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில், சங்ககிரி ஆர்.டி.ஓ., கேந்திரியா, சங்ககிரி டி.எஸ்.பி., தனசேகரன், இடைப்பாடி அரசு மருத்துவர் ஸ்ரீபாலாஜி, யுனிவர்சல் எஜிகேசனல் இன்ஸ்டியூசன் சேர்மன் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றனர்.
வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி கேலக்ஸி பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில், சேலம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன், கேலக்ஸி பள்ளி தாளாளர் உதயகுமார், செயலர் சுரேஷ்பாபு, காரிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம், வேப்பநத்தம், நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, எஸ்.பி., விமலா, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் சாந்தா அருள்மொழி, நேஷனல் பப்ளிக் பள்ளி தாளாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிகழ்ச்சிகள் இன்று காலை, 8:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. முன்பதிவு செய்து, பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 1,000 ரூபாய் மதிப்பில் பரிசு பொருட்களுடன், அரிச்சுவடி எழுதும் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்
வழங்கப்படும்.
சேலம் நிகழ்ச்சியை ஸ்ரீவித்யவாணி வித்யாலயா, ஏ.வி.ஆர்., ஸ்வர்ண மஹால் நிறுவனம், இடைப்பாடி நிகழ்ச்சியை யுனிவர்சல் பப்ளிக் பள்ளி, கூட்டாத்துப்பட்டி நிகழ்ச்சியை கேலக்ஸி பள்ளி, நாமக்கல் வேப்பநத்தம் நிகழ்ச்சியை, நேஷனல் பப்ளிக் பள்ளி இணைந்து வழங்குகின்றன.

Advertisement