மேட்டுப்பாளையம் -- வாரணாசி; சூடு பிடிக்கும் உருளை வியாபாரம்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளில் இருந்து முதல் முறையாக வாரணாசி மார்க்கெட்டிற்கு உருளைக்கிழங்குகள் அனுப்பப்பட்டன. இந்த முயற்சி வெற்றியை தந்துள்ளது என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. தினமும் மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளில் சுமார் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கிறது. மீதம் உள்ள 50 சதவீதங்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கூடலுார்; ஈரோடு மாவட்டத்தில் திம்பம், தாளவாடி, கேர்மாளம்; கர்நாடகா மாநிலத்தில் உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், கோலார், குஜராத், மகாராஷ்டிராவில் இந்துார்; உத்திரபிரதேசத்தில் ஆக்ரா; உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பல நுாறு டன் உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இதுகுறித்து பி.டி., உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர் பாபு கூறுகையில், ''திம்பம் உருளைக்கிழங்குகள் சீசன் என்பதால் மண்டிகளுக்கு தினமும் 120 முதல் 150 டன் திம்பம் வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சோதனை முயற்சியாக உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மார்க்கெட்டிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 32 டன் திம்பம் கிழங்குகள் அனுப்பப்பட்டன. தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.600 முதல் ரூ.750 வரை விலை நிர்ணயம் செய்து அனுப்பப்பட்டது. வாரணாசி மார்க்கெட்டில் திம்பம் கிழங்குகளுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து தினமும் லோடுகளை அனுப்பி வருகிறோம். இந்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது.

மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வடமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்குகள் வரும் நிலையில், தற்போது இங்கிருந்து நாம் வடமாநிலங்களுக்கு அனுப்பி உள்ளோம். இதனால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இனி வரும் நாட்களில் விலை உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.----

Advertisement