ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்

நாக்பூர்: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது என்று, நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் விழாவில், அதன் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.
அமெரிக்கா புதிய வரிவிதிப்புகளை பிற நாடுகளுக்கு விதித்து வருகிறது. இது அந்த நாட்டின் நலனுக்கு உதவுகிறது. ஆனால், இதன் விளைவுகளை பிற நாடுகள் சந்தித்து வருகின்றன. எந்தவொரு நாடும் தனியாக வளர முடியாது.
ஒரு நாடு பரஸ்பர சார்பு அல்லது ராஜதந்திர உறவுகள் மூலம் முன்னேறும். ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. அதேவேளையில், நாம் கட்டாயம் தற்சார்புடைய நாடாக இருக்க வேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகள் அவசியத்தின் காரணமாக இருக்கக் கூடாது. மாறாக அது நம்முடைய தேர்வு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது.
இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடந்த வன்முறை சம்பவம் கவலையளிக்கின்றன. மக்கள் நலனை புறக்கணித்தால் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அண்டை நாடுகளில் நடந்ததைப் போன்ற இடையூறுகளை உருவாக்க விரும்பும் சக்திகள் நமது நாட்டின் உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வருகின்றன.
தேசிய உணர்வு, கலாசாரத்தின் மீதான நம்பிக்கை தற்போதைய இளைய தலைமுறையினரிடையே அதிகம் காணப்படுகிறது. தனி நபர்கள், சமூக சேவை நிறுவனங்கள் சமூகத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்காக சுயநலமின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.
வலிமையுடன் இருக்க வேண்டும்
மோகன் பகவத் மேலும் பேசியதாவது: ஹிந்து சமுதாயம் பொறுப்பு மிக்கதாக இருக்கிறது. 'எங்களுக்கு', 'அவர்களுக்கு' என்ற கொள்கை இங்கு இல்லை. பிளவுபட்ட கட்டடம் உறுதியாக நிற்காது. அந்நிய படையெடுப்பாளர்கள் இங்கு வந்தனர். ஆனால், நமது வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை. நமது கலாசார ஒற்றுமையே நமது பலம். பிரயாக்ராஜ் நகரில் நடந்த மஹாகும்பமேளா நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளித்தது. நமது அரசு அதற்கு உறுதியான பதிலடி கொடுத்தது. இதில், நமது தலைமையின் உறுதியான நிலைப்பாடு மற்றும் நமது ஆயுதப்படைகளின் வீரம், நமது சமூகத்தின் ஒற்றுமை ஆகியவை வெளிப்பட்டது. நாம் மற்ற நாடுகளுடன் நட்புடன் இருக்கிறோம். வரும் காலத்திலும் அது தொடரும். அதேநேரத்தில் நாம் இன்னும் கவனத்துடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பல நாடுகளின் கொள்கைகள் மூலம் யார் நமது நண்பர்கள் மற்றும் எதிரிகள் என்பதை வெளிக்காட்டியது.
நக்சலைட்கள் பல பகுதிகளில் சுரண்டல், அநீதி மற்றும் வளர்ச்சியின்மை இருந்தது. தற்போது அந்தத் தடை நீங்கி உள்ளது. நீதி, வளர்ச்சி, நல்லெண்ணம் உள்ளிட்டவை அந்தப் பகுதிகளில் வளர்வதற்கு உறுதியான நடவடிக்கை தேவை. நாட்டை உலகளாவிய தலைவராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. தெற்கு ஆசியாவுக்கு தேவையான குடிநீர் இமயமலையில் தான் உருவாகிறது. இமயமலையில் ஏற்படும் பேரழிவு, பாரதத்துக்கும் , மற்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.








மேலும்
-
ரஷ்யாவின் முக்கிய இலக்குகளை தாக்க உக்ரைனுக்கு ஆயுதம் தருகிறது அமெரிக்கா
-
காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; பாலஸ்தீனர்கள் 52 பேர் பலி
-
போர் நிறுத்த ஒப்பந்தம் நிராகரிப்பு எதிரொலி: சத்தீஸ்கரில் 103 நக்சல்கள் சரண்
-
மத்திய பிரதேசத்தில் சோகம்; குளத்தில் டிராக்டர் கவிழ்ந்ததில் 10 பேர் பலி
-
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
-
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு