மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை
திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மாறிய பிறகு, மக்களின் அன்றாட பிரச்னைகளின் மீது முழு கவனத்தையும் செலுத்தியது தினமலர்.
அவசியமான கிராமத்தில் ஆஸ்பத்திரி இல்லை; ஆஸ்பத்திரி இருந்தால் டாக்டர் இல்லை; டாக்டர் இருந்தால் மருந்து இல்லை.
பள்ளி இல்லை; இருந்தால் கட்டடம் இல்லை; கட்டடம் இருந்தால் போதிய ஆசிரியர்கள் இல்லை.
ரேஷன் கார்டு தரவில்லை; கார்டு தந்தால் சீனி தருவதில்லை. தெரு விளக்கு எரியவில்லை. ஊர்களுக்கு பஸ் இல்லை; இருந்தாலும் உரிய நேரத்துக்கு வருவதில்லை.
குளங்கள், அவற்றின் பாழான நிலை; ஆக்கிரமிப்புகள், இடுகாடுகளின் அவல நிலை, குடிதண்ணீருக்கு படும்பாடு…
இது மாதிரியான செய்திகள் திரும்ப திரும்ப வந்தாலும், சலிக்காமல் வெளியிட்டு அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து தீர்த்து வைத்தது தினமலர். ஆசிரியருக்கு கடிதம் பகுதி மூலமும் மக்களின் தேவைகள் அனைத்தும் பொது கவனத்துக்கு வந்து, நெடுநாள் தீர்க்கப்படாமலிருந்த குறைகளும், தினமலர் கடினமாக வாதாடிய காரணத்தால் தீர்க்கப்பட்டன.