எம்.ஜி.ஆரின் ஆசை

ஈ ரோடு பதிப்பை தொடங்கி வைத்த எம்ஜிஆர் தனது நெடுநாள் ஆசை ஒன்றை வெளியிட்டார்.


“தினமலர் திருநெல்வேலி பதிப்பை முதல் முறையாக படித்தபோதே, இது ஏன் இன்னும் சென்னையில் வரவில்லை என்று யோசித்தேன். சென்னையில் இருந்தும் தினமலர் வெளிவரவேண்டும் என்று ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன்.


என்னால் செய்ய முடியாததை, வேறு சிலர் மூலமாக துாண்டிவிட்டு செய்யச்சொன்னேன். ஏதேதோ துாண்டி விடுகிறார்கள். நான் நல்லதைத்தான் தூண்டி விட்டேன். சென்னை துவக்க விழாவில் நான் கலந்துகொள்ள முடியவில்லை. அது எனது துரதிருஷ்டம். மற்ற வழிகளில் எனக்கு கிடைக்காத தகவல்களை, நான் தினமலர் மூலம் தெரிந்து கொள்வதுண்டு. மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக பத்திரிகை இருக்க வேண்டும்.

அது உறுதிமிக்க பாலமாக இருக்க வேண்டும். தினமலர் அந்த பொறுப்பை சிறப்பாக செய்கிறது.

முன்பிருந்த அரசு விளம்பரம் தரவில்லை என்று கிருஷ்ணமூர்த்தி கூறினார். அப்படி ஒரு வழி இருப்பதே எனக்கு தெரியாது. 'விளம்பரம் தந்தால் தாருங்கள்; இல்லையென்றால் விடுங்கள். நாங்கள் மக்களுக்கு சொல்வதை சொல்லிக் கொண்டுதான் இருப்போம்' என்று, தினமலர் கம்பீரமாக செயல்படுகிறது.

தினமலரில் வரும் குழந்தைகள் படக்கதையை என் வீட்டு குழந்தைகளுக்கு காட்டி படிக்க வைக்கிறேன். வீரம், ஆண்மை, பண்பு, நேர்மை, அன்பு, இணைப்பு, பிணைப்பு, பாசம் ஆகியவற்றை குழந்தை பருவத்திலேயே உணர்த்த வேண்டும். ஞாயிறுதோறும் வாரமலர் இணைப்பு தருவதை பார்த்து, பலரும் தனி மலர் தர ஆரம்பித்துள்ளனர்.

எனக்கு ஓர் ஆசை உண்டு. தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். உடல்நலம் பெற்று ஒரு விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அவருக்கு நான் மாலை அணிவித்து மகிழ வேண்டும். அமர்ந்தபடியே அவர், 'வாழ்க' என்று என்னை வாழ்த்த வேண்டும் என்று விழாவில் தனது ஆசையை வெளியிட்டார் எம்ஜிஆர்.

Advertisement