பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு

சென்னை:கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை , சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய, பா.ஜ., கவுன்சிலர் தரப்பு முறையீட்டை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
கரூரில், த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில், 41 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பான விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.வேல்முருகன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, நேற்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கியது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரிய மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளும்படி முறையிட்டார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.
முன்ஜாமின் மனு தள்ளுபடி த.வெ.க.,வின் நாமக்கல் மாவட்ட செயலரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், 'பிரசாரத்தில் பங்கேற்ற தொண்டர்களை கட்டுப்படுத்த தவறியது ஏன்' என்று கேள்வி எழுப்பியது.
த.வெ.க., தலைவர் விஜய், கடந்த மாதம் 27ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பங்கேற்ற சிலர், அப்பகுதியில் உள்ள டாக்டர் லட்சுமணன் பன்னோக்கு மருத்துவமனையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுதொடர்பாக, த.வெ.க., மாவட்ட செயலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்.சந்தோஷ் ஆஜராகி, ''மனுதாரரின் கட்சியினர் செயல்பாடுகளால், 5 லட்சம் ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
''இது தவிர, பொது சொத்துக் களை சேதப்படுத்தியதாக, மனுதாரர் உள்ளிட்டோர் மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனவே, முன்ஜாமின் வழங்கக் கூடாது,'' எனக்கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதை ஆய்வு செய்த நீதிபதி, 'கட்சியினர் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என, மனுதாரர் எப்படி கூறலாம்; கட்சியினரை ஏன் கட்டுப் படுத்தவில்லை? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா' என்று கேள்வி எழுப்பினார்.
முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
தி.மு.க. 'மாஜி' அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்
-
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
-
'கள்ளக்குறிச்சிக்கு போகாத முதல்வர் மணிப்பூர் பற்றியெல்லாம் பேசலாமா?'
-
கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரம் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., கடிதம்
-
சரியான சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுமியின் கை அகற்றம்
-
அமைதியே வெற்றிக்கான அறிகுறி சொல்கிறார் செங்கோட்டையன்