கரூர் நெரிசல் உயிரிழப்பு விவகாரம் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., கடிதம்

சென்னை : கரூரில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.

கரூரில், த.வெ.க., தலைவர் விஜய், பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஹேமமாலினி தலைமையில், அனுராக் தாக்கூர் உட்பட, 8 பேர் அடங்கிய எம்.பி.,க்கள் குழுவை, பா.ஜ., மேலிடம் அனுப்பியது. அந்த குழுவினர், கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களை சந்தித்தனர்.

இந்நிலையில், குழுவில் இடம் பெற்ற அனுராக் தாக்கூர், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:

கரூரில் துயர சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினரையும் எம்.பி.,க்கள் குழு, சந்தித்தது. இந்த துரதிருஷ்ட சம்பவத்திற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்து, அவர்கள் மனதில் கடுமையான கேள்விகள் உள்ளன. இந்த சூழ்நிலைக்கு நீங்கள் முழு பொறுப்பேற்க வேண்டும்

மேலும், பின்வரும் கேள்விகளுக்கான பதில்கள் அடங்கிய அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு, அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.

 கூட்ட நெரிசல் ஏற்பட வழிவகுத்த முதன்மை காரணிகள் மற்றும் வரிசையாக நடந்த நிகழ்வுகள் என்ன?

 நிகழ்வுக்கு முன்னும் பின்னும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க, அரசு நிர்வாகமும் காவல்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க பிரிவுகள் செய்த ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

 தடுப்பு நடவடிக்கைகள் இருந்ததென்றால், சோக நிகழ்வுக்கான குறைபாடுகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் என்ன?

இந்த கேள்விகளுக்கான பதில்களுடன், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ள நடவடிக்கை பற்றி பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுள்ளோம்.

குழுவில் உள்ள எம்.பி.,க்கள் கையொப்பமிட்டு, கரூர் கலெக்டருக்கு அனுப்பிய கடிதம், தமிழக தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதம், முதல்வரின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.

மக்களின் கேள்விகளுக்கு, துறை வாரியான விரிவான பதில்களை கோருகிறோம். இந்த விஷயத்தில், தங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement