சரியான சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுமியின் கை அகற்றம்

பாலக்காடு: பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில், சரியான சிகிச்சை அளிக்காததால், எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பல்லச்சேனை பகுதியைச் சேர்ந்த பிரசீதாவின் மகள் வினோதினி, 8. அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறார்.
இந்நிலையில், கடந்த செப். 24ம் தேதி மாலை விளையாடிய போது, வினோதினி தரையில் விழுந்து காயமடைந்தார். பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிசிசைக்காக சிறுமியை அனுமதித்தனர். சிறுமியின் கையில் பிளாஸ்ட்டர் போட்டு, ஐந்து நாட்கள் கழித்து வருமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர்.
வீட்டிற்கு வந்த பிறகும் வலி தாங்காமல் அழுத சிறுமியின் கையில் இருந்த பிளாஸ்ட்டரை அவிழ்த்து பார்த்த போது, கை வீங்கியிருந்தது. மீண்டும் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் காண்பித்த போது, தொடர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை அணுகுமாறு கூறியுள்ளனர்.
ஆனால், சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தகுந்த சிகிச்சை வழங்காததால் சிறுமியின் கை பாதித்துள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்து கையை அகுற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
இதையடுத்து, குழந்தையின் கையை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து, சிறுமியின் தாய் பிரீதா கூறுகையில், ''சரியான சிகிச்சை அளிக்காததால், கையில் ரத்த ஓட்டம் தடைபட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, போலீசில் புகார் அளிக்க உள்ளேன்,'' என்றார்.
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி, பாலக்காடு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெய்ஸ்ரீ கூறுகையில், ''இந்த சம்பவத்தில் டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த தவறும் இல்லை. அரிதிலும் அரிதான இது போன்று நடக்கும்,'' என்றார்.
இந்நிலையில், எட்டு வயது சிறுமிக்கு கை அகற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பாலக்காடு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு, மாவட்ட மருத்துவ அதிகாரி ரோஷ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும்
-
கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு
-
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் சிறப்பு அதிகாரி கைது
-
ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை
-
தசராவால் குப்பை அதிகரிப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
-
ஆந்திர அமைச்சருக்கு பிரியங்க் கார்கே பதிலடி
-
அண்ணன் மகனின் நிலம் 'ஸ்வாகா': நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., சிக்கினார்