காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2ம் இடம் கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்

விழுப்புரம்:வடகிழக்கு பருவமழைக்கு மின் வினியோக உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதாக, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண் இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தலைமை செயலகம் மற்றும் மாவட்டந்தோறும் துறை சார்ந்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தை பொருந்த வரை கடந்த ஆண்டில் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், கேபிள், போர்டுகள், டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்தன.

அதன் காரணமாக இந்தாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக களஆய்வு நடத்தப்பட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. டிரான்ஸ்பார்மர், துணை மின் நிலையங்களில் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர், டீசல் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 590 கி.மீ., மின்கம்பி, 39,000 பைப்புகள், 10,647 மின்மாற்றிகள், மீட்டர் பாக்ஸ்கள் மற்றும் 3.4 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. 186 மண்டலங்களில் 5581 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 45 கண்காணிப்பு மைய அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தவுள்ளனர். அனைத்து வகையான மின் வினியோக உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன.

மழை நேரங்களில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ரெயின்கோட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது. கூடுதல் பணியாளர்களை தேர்வு செய்து பணியில் ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர் நியமனங்கள் குறித்து கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

மாதந்தோறும் மின்கட்டண முறைக்கு, 3.6 கோடி நுகர்வோர்களில், 1.43 கோடி நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி இறுதி நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் மீட்டர் பயன்பாட்டிற்கு வரும். பின், கொள்கை முடிவின் அடிப்படையில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், சோலார் மின் உற்பத்தியில் நான்காவது இடத்திலும் உள்ளது. மேலும், வீடுகளுக்கு சோலார் குறித்த திட்டங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement