தசராவால் குப்பை அதிகரிப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு

பெங்களூரு: தசரா பண்டிகையால், பெங்களூரில் குப்பை அதிகரித்துள்ளது. மார்க்கெட்கள் மட்டுமின்றி சாலை ஓரங்களிலும் குப்பை அள்ளப்படாமல் குவிந்துள்ளது.

இதுகுறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:

பொதுவாக பெங்களூரில், தினமும் 4,900 டன் குப்பை உருவாகும். தசரா பண்டிகையையொட்டி, குப்பை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் பலர், பண்டிகைக்காக விடுமுறையில் சென்றதால், குப்பை அள்ளுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

சாலைகள், மார்க்கெட் பகுதிகளில் 'பிளாக் ஸ்பாட்'டுகள் உருவாகியுள்ளன. ஆயுத பூஜை, விஜயதசமி பூஜைக்கு வியாபாரிகள், தற்காலிக கடைகள் அமைத்து, வாழை மரங்கள், பூசணிக்காய், மாவிலைகள், பூக்கள் விற்றனர். விற்பனையாகாத பொருட்களை அங்கேயே வீசிச் சென்றுள்ளனர்.

வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களை, பொது மக்கள் சாலை ஓரங்களில் வீசியுள்ளனர். இதனால் குப்பை அதிகமாக தென்படுகிறது. அவ்வப்போது மழை பெய்வதால் குப்பை துர்நாற்றம் எடுப்பதாக, புகார் வந்துள்ளது.

கே.ஆர்.மார்க்கெட், காந்தி பஜார், தேவசந்திரா, கே.ஆர்.புரம் மார்க்கெட், மல்லேஸ்வரம் மார்க்கெட், மடிவாளா, சிவாஜி நகர், மாநகராட்சி பஜார் உட்பட 12 மார்க்கெட்களில், பெருமளவில் குப்பை சேர்ந்துள்ளது.

இவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. படிப்படியாக சுத்தம் செய்து வருகிறோம். இதற்காக கூடுதல் ஜே.சி.பி.,க்கள், ஆட்டோ டிப்பர்கள், காம்பாக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement