சிவகாசியில் ரோடுகள், பஜாரில் ஆக்கிரமிப்பு போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

சிவகாசி: சிவகாசி நகரில் முக்கிய ரோடுகளில் கடைகள், வாகனங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வருகின்றன.

சிவகாசிக்கு மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தவிர டூவீலர்கள் கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. இந்நிலையில் நகரில் பெரும்பான்மையான முக்கிய ரோடுகள், பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவது பெரிது சிரமமாக உள்ளது. நகரில் கீழ ரத வீதி, புது ரோடு, என்.ஆர்.கே.ஆர்., ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பஜார்களில் ஆக்கிரமிப்பினால் ரோடு மிகவும் குறுகலாகிவிட்டது. இந்த ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் திருத்தங்கல் ரோடு விளாம்பட்டி ரோடு பைபாஸ் ரோடு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரக் கடைகளால் வாகனங்கள் எளிதில் சென்று வர முடியவில்லை. ஆக்கிரமிப்பினால் ரோடு சுருங்கிய நிலையில் டூ வீலர்கள் , கார் உள்ளிட்ட வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் காலை மாலையில், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்கின்ற மாணவர்கள், பல்வேறு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப் படுகின்றனர்.

Advertisement