வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு

பெங்களூரு: “காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதி திட்டங்கள், பெண்களின் முன்னேற்றத்துக்கு காரணமாக உள்ளன,” என, காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இதுகுறித்து, நேற்று அவர் கூறியதாவது:

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கர்நாடக அரசு அளித்துள்ள திட்டங்கள், பொருளாதார மேம்பாட்டுக்கு பெரும் பங்கு அளித்துள்ளன. பொருளாரத்துக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பளிக்கும் திட்டத்தின் பயனாக, பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததாக, வல்லுநர்கள் அறிக்கை கூறுகிறது.

பெங்களூரில் இந்த எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 80 சதவீதம் பயனாளிகள், தங்களின் உடல் நலன் பாதிப்புக்கு, சிறந்த சிகிச்சை பெற்றுள்ளனர். சக்தி திட்டத்தால், 72 சதவீதம் பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. மாதம் 2,000 ரூபாய் வழங்கும் 'கிரஹலட்சுமி' திட்டத்தால், குடும்பங்களின் நலனுக்கு உதவுகிறது.

'அன்னபாக்யா' திட்டத்தை, 94 சதவீதம் பயனாளிகள் பயன்படுத்துகின்றனர். 91 சதவீதம் பயனாளிகள் அரிசி வாங்குவதால், மிச்சமாகும் பணத்தில் பால், பழங்கள், காய்கறிகள் வாங்குகின்றனர். இத்திட்டம் மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கிறது.

'யுவநிதி' திட்டத்தில், 42 சதவீதம் பயனாளிகள் மாத உதவித்தொகை பெறுகின்றனர். இதை அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள பயன்படுத்துகின்றனர். ஐந்து திட்டங்களும் பெண்களுக்கு பெரிதும் உதவுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement