அமைச்சர் பதவியை பறித்த மாணவர் கொலை வழக்கில் ஆதாரங்கள் இல்லை என கொப்பால் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகா கனகபுராவை சேர்ந்தவர் மாணவர் எல்லாலிங்கா, 17.தன் ஊரில் வடிகால் பணிகளின்போது நடந்த ஊழல்கள் குறித்து 2014ல் யு டியூபிலும், தொலைக்காட்சி விவாதத்திலும் எல்லாலிங்கா பேசினார். அப்போது, கொப்பால் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சிவராஜ் தங்கடகியும் ஊழல் செய்துள்ளதாக பேசினார். இதனால், அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
சி.ஐ.டி., விசாரணை இதையடுத்த சில நாட்களில் எல்லாலிங்காவின் உடல், கொப்பால் ரயில் நிலையத்தில் கிடந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவரை அமைச்சர் சிவராஜ் தங்கடகியின் ஆதரவாளர்கள் தான் கொலை செய்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்வைத்து பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
அப்போதைய பா.ஜ., மாநில தலைவராக இருந்த பிரஹலாத் ஜோஷி, அமைச்சரை கைது செய்ய கோரினார். இது தேசிய அளவிலான செய்திகளில் இடம் பிடித்தது. இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, சிவராஜ் தங்கடகியின் அமைச்சர் பதவியை பறித்தது.
இதனிடையே மாணவர் கொலை வழக்கில் சி.ஐ.டி., விசாரணை துவங்கியது. விசாரணையில், அமைச்சரின் உதவியாளர் ஹனுமேஷ் நாயக், அவரது மகன் மஹாந்தேஷ் நாயக், பாலனகவுடா, கடமஞ்சா, மனோஜ் பாட்டீல், நந்தீஷ், பரசுராம், யமனுாரப்பா, துர்கப்பா ஆகிய ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களில் சிறையில் இருந்தவர்கள், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிப்பு இதையடுத்து, கொப்பால் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணை, கடந்த 10 ஆண்டுகளாக பொறுமையாக நடந்து வந்தது. 2018 சட்டசபை தேர்தலில் கனககிரி தொகுதியில் போட்டியிட்ட சிவாராஜ் தங்கடகி தோல்வி அடைந்ததற்கும், எல்லாலிங்கா கொலை வழக்கு காரணமாக அமைந்தது.
அமைச்சரின் நெருக்கமானவர் மீது வழக்கு தொடரப்பட்டதால் தண்டனை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த வழக்கின் இறுதி விசாரணை, கடந்த மாதம் 24ம் தேதி கொப்பால் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் ஆஜராகினர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலையிலிருந்தே நீதிமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
கொப்பால் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி சந்திரசேகர், 'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை போலீஸ் தரப்பு சமர்ப்பிக்க தவறிவிட்டது. ஆதாரம் இல்லாததால் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் நிரபராதிகள். அவர்கள் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்' என தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பால், தற்போது கன்னட, கலாசாரத் துறையின் அமைச்சராக இருக்கும் சிவராஜ் தங்கடகி, நெருக்கடியிலிருந்து தப்பி உள்ளார்.
மேலும்
-
வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி பிரமாண்டமாக வளர்கிறது புதிய கோள்
-
கல் குவாரிக்கு எதிராக போராட்டம் 'மாஜி' அமைச்சர், 379 பேர் கைது
-
'இ - பாஸ்' திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
-
தி.மு.க. 'மாஜி' அமைச்சர் சமாதி இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்கிய அதிகாரிகள்
-
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
-
'கள்ளக்குறிச்சிக்கு போகாத முதல்வர் மணிப்பூர் பற்றியெல்லாம் பேசலாமா?'