கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி

1

சென்னை: 'தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் என்பதே, அ.தி.மு.க., கூட்டணியின் அடிப்படை கொள்கை' என, அ.தி.மு.க., பொதுசெயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



ராமநாதபுரம் மாவட்ட நிகழ்ச்சியில் பேசும் முன், முதல்வர் ஸ்டாலின் ஒருமுறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து, அவரே கேட்க வேண்டியவை. கச்சத்தீவைப் பற்றி பேச, அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? 39 எம்.பி.,க்களை வைத்துக்கொண்டு, பார்லிமென்டில் பேசாமல், நீலிக்கண்ணீர் வடிக்கும் நாடகத்தை, மக்கள் நம்பத் தயாராக இல்லை.



கச்சத்தீவைத் தாரைவார்த்தவர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று தி.மு.க.,வுடன் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ். கச்சத்தீவு பற்றி சண்டை போட வேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளுங்கள்.


கரூர் துயரத்தின்போது, அவர்கள் ஏன் வந்தனர்; இவர்கள் ஏன் வந்தனர்; இது அரசியல் தானே என கேட்கிறார். ஸ்டாலின். கரூருக்கு நள்ளிரவில் ஓடோடி சென்ற இவர், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை; வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? சென்னையில் விமானப்படை சாகசத்தின்போது உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை; ஸ்டாலின் செய்வது மட்டும் அரசியல் இல்லாமல் அவியலா?


ஆட்சி நிர்வாகம், நிதி நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் புழக்கம் என அனைத்திலும் தி.மு.க., அரசு தோல்வி அடைந்து விட்டது. மக்களை வாட்டி வதைக்கும் தோல்வி மாடல் தி.மு.க., ஆட்சியை விரட்டி அடிப்பதே, எங்கள் கூட்டணியின் கொள்கைக்கான அடிப்படை.


தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதால், தமிழக மக்கள் நலன், மாணவர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும் என்பதே, எங்கள் கூட்டணிக்கான பொது காரணம். இதைவிட ஒரு வலுவான, மக்கள் நலன் சார்ந்த அடிப்படை காரணம் தேவையா என்ன?


தி.மு.க., ஆட்சியின் தவறுகளை சொன்னால்; குறிப்பாக, ஸ்டாலின் அரசியல் செய்யும் அவலத்தை தோலுரித்தால், அவரது கண்ணுக்கு கூட்டணிக் கணக்காக தெரிகிறது; அதற்கு, நாங்கள் என்ன செய்வது? ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement