முதல்வர் ஸ்டாலினின் பகுத்தறிவு சர்ச் செல்வதை தடுக்கவில்லையா? ஹிந்து முன்னணி கேள்வி

4

திருப்பூர்: ''முதல்வர் ஸ்டாலின், மதச்சார்பற்றவராக இல்லை'' என்று ஹிந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:



சிவகங்கை, அடைக் காட்டூர் இருதய ஆண்டவர் சர்ச்சில், அரசு நிதியில் நடக்கும் புனரமைப்பு பணிகளை, முதல்வர் ஸ்டாலின், நேரில் ஆய்வு செய்துள்ளார்.

இது அப்பட்டமான மதவாத அரசியல். தேர்தலில், தி.மு.க., பெற்ற வெற்றியை, கிறிஸ்துவர்கள் போட்ட பிச்சை என்று பாதிரியார் ஒருவர் பகிரங்கமாக கூறினார்.

தற்போது, மக்கள் வரிப்பணத்தை நிதியாக வழங்கி, சர்ச்சுகளில் புனரமைப்பு பணிகள், அரசு சார்பில் நடத்தப்படுகிறது. அதில் ஒரு பணியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ஹிந்து அறநிலையத்துறை பிடியில் சிக்கி, கோவில்கள் சீரழிகின்றன. பல கோவில்கள் ஒரு கால பூஜைக்கு வழியின்றி உள்ளன.

வருவாய் வரும் கோவில்களில் மட்டும், அங்குள்ள நிதியை எடுத்து செலவு செய்து விட்டு, அரசு நிதியில் செய்ததுபோல், தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது.

அந்த பணியை கூட, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்ததில்லை. அன்னிய மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதோடு, நேரடியாக அந்த பண்டிகைகளில் பங்கேற்று மகிழும் ஸ்டாலினை, சர்ச்சுக்கு செல்வதும் மத நம்பிக்கை தான் என அவரது பகுத்தறிவு தடுக்கவில்லை.

ஹிந்து பண்டிகை, ஹிந்து கோவில்கள் என்றால் மட்டும், அவருக்கு பகுத்தறிவு குறுக்கே வந்து தடுக்கிறது. இஸ்லாமிய மாணவர்கள், பத்து பேர் வெளிநாடு சென்று பயில, 3.60 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை ஸ்டாலின் வழங்கினார்.

இது போன்ற அவரது நடவடிக்கைகள், அவர் மதச் சார்பற்றவராக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் நடுநிலையோடு நடப்பார் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.

ஹிந்துக்கள் 85 சதவீதத்துக்கு மேல் இருந்தும் மரியாதை இல்லை. ஆனால், 15 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுக்காக, அவர்களின் ஏவலாளாக தி.மு.க., செயல்படுகிறது.

ஹிந்துக்கள் ஒன்றிணைந்து, ஹிந்துக்களை மதிப்பவருக்கு மட்டுமே ஓட்டளிக்க வேண்டும். அது தான் வருங்காலத்தில் நமக்கு பாதுகாப்பு.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement