கோவையில் 10.1 கி.மீ., மேம்பாலம் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கோவை:கோவையின் பெருமைமிகு அடையாளமாக, 10.1 கி.மீ., நீளத்துக்கு, மாநில நெடுஞ்சாலை துறையால் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு, ஜி.டி.நாயுடு பெயர் சூட்டி, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

கோவை அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை, 16 கி.மீ., துாரம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டும் திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டது.

முதல்வராக பழனிசாமி இருந்த போது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டுவதற்கு, 1,621 கோடி ஒதுக்கப்பட்டு, 2020 மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. துாண்களுக்கு துளையிட மண் பரிசோதனை செய்வது உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன.

கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கூடுதல் தேவைக்காக பாலத்தின் மதிப்பீடு, 1,791.23 கோடி யாக அதிகரிக்கப்பட்டு வேலைகள் துரிதப்படுத்தப் பட்டன. உப்பிலிபாளை யம் பகுதி, கோல்டுவின்ஸ் பகுதி மற்றும் மையப்பகுதி என, ஒரே நேரத்தில் மூன்று பகுதிகளில் பணிகள் செய்யப்பட்டன.

கொரோனா காலம், நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல், மின் உயரழுத்த பாதை, டிரான்ஸ்பார்மர்கள் குறுக்கீடு, ரயில்வே மேம்பாலம், நான்கு ரோடு சந்திப்புகள் என பல்வேறு தடைகளை கடந்து, மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

'ஜி.டி. நாயுடு மேம்பாலம்' என பெயர் சூட்டி, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று பாலத்தை திறந்து வைத்து அதில் பயணித்தார்.

பாலத்துக்கான கல்வெட்டை, முதல்வரும், ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலும் இணைந்து திறந்து வைத்தனர்.

Advertisement