பா.ஜ.,வுடன் கைகோர்த்து தேர்தல் கமிஷன்வாக்காளர்கள் பட்டியலில் தில்லுமுல்லு சட்டசபை காங்., தலைவர் குற்றச்சாட்டு

ராமநாதபுரம்:பா.ஜ., தலைமையிலான மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு இந்திய தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலில் தில்லு முல்லு செய்துள்ளதாக ராமநாதபுரத்தில் தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ்குமார் குற்றம் சாட்டினார்.

ராமநாதபுரத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது: 2014க்கு முன் காங்., ஆட்சியில் இருந்த போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்கட்சித்தலைவர் அடங்கிய குழுவினர் தேர்தல் கமிஷனரை நியமனம் செய்தனர்.

பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் இம்முறையை மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீக்கப்பட்டு பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சி தலைவர் அடங்கிய குழுவை உருவாக்கி தேர்தல் கமிஷனரை தேர்வு செய்துள்ளனர். அப்போதே லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது தேர்தல் கமிஷனின் முறைகேடுகளை கண்டுபிடித்து புள்ளி விபரத்துடன் ராகுல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது தொடர்பாக லோக்சபா கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். மோடி அரசு பதில் தரவில்லை. பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி விட்டனர். எப்படி இது நடந்தது என ராகுல் பேசினார். அதற்கும் பதிலளிக்கவில்லை.

ஒவ்வொரு மாநில வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்து தேர்தல் கமிஷன் பா.ஜ.,வினருக்கு துணை புரிந்துள்ளது. இதை ராகுல் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். ஒரு சட்டசபை தொகுதிக்கு 50 ஆயிரம் கையெழுத்துகள் பெற்று காங்., அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூலம் அக்.,15 ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்க உள்ளோம்.

இந்திய தேர்தல் கமிஷனரை பதவி நீக்கம் செய்யும் வகையில் இது அமைய வேண்டும். இம்மாதம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்த முகாம் விரைவில் நடக்கவுள்ளது. பூத் அளவில் காங்.,கட்சியினர் முகவர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement