போர் முடிந்தும் அமைதி திரும்பவில்லை: காசாவில் உள்நாட்டு சண்டையில் 32 பேர் பலி

ஜெருசலேம் : போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையிலும், காசாவில் வெடித்த உள்நாட்டு சண்டையில் 32 பேர் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றம் தொடர்கிறது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில் அப்போர் அமெரிக்கா முன்மொழிந்த அமைதி திட்டத்தின் அடிப்படையில் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இனி, போர் இன்றி நிம்மதியாக வாழலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த காசா மக்கள் தலையில் இடி விழுந்தது போன்றதொரு சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கும், காசாவின் செல்வாக்கு மிக்க ஆயுதமேந்திய குழுவான டக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே சப்ரா என்ற பகுதியில் கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், டக்முஷ் பிரிவைச் சேர்ந்த 19 பேர் உட்பட, 32 பேர் கொல்லப்பட்டனர். இம்மோதலில் ஹமாஸ் ஆதரவு சமூக ஊடக பத்திரிகையாளர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டக்முஷ் பிரிவினர், காசாவில் நீண்டகாலமாக ஹமாசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த காலங்களில் இருதரப்பிடையே பலமுறை மோதல் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இரண்டு ஹமாஸ் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழி வாங்கவும், குறிப்பிட்ட பகுதியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஹமாஸ் இந்த மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.வெடிகுண்டு சத்தமும், துப்பாக்கிச் சத்தமும் இன்றி இனி நிம்மதியாக வாழலாம் என நிம்மதி பெருமூச்சு விட்ட காசா மக்களுக்கு, உள்நாட்டு வன்முறை பேரிடியை தந்துள்ளது.