இருமல் மருந்து நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் பெற்ற டாக்டர்

5

போபால்: ம.பி.,யில் இருமல் மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட டாக்டர் மருந்து நிறுவனங்களிடம் 10 சதவீதம் கமிஷன் பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் 1-6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. 21 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், அவர்கள் உட்கொண்ட 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து தான் காரணம் என்பது தெரியவந்தது.

இந்த மருந்து தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் காஞ்சிபுரத்தில், கோல்ட்ரிப் மருந்தை தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதன் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். இந்த இருமல் மருந்தை பரிந்துரை செய்த டாக்டர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



பிரவீன் சோனி ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிபதி கவுதம் குமார் குஜார் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீது போலீசார் தாக்கல் பதில் மனுவில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கலவையிலான மருந்தை வழங்க அரசு தடை செய்தது தெரிந்துஇருந்தும் டாக்டர் இந்த மருந்தை வேண்டும் என்றே பரிந்துரை செய்தார். இதற்காக அந்த மருந்தை ஒவ்வொரு முறை பரிந்துரை செய்யும் போது, அதனை தயாரித்த நிறுவனத்திடம் இருந்து 10 சதவீதம் கமிஷன் பெற்றுக் கொண்டார் எனத் தெரிவித்து இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து டாக்டரின் ஜாமின்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement