ஆங்கில வழி... அதோ கதி! அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனி; ஆசிரியர்கள் ஒத்துழைக்காததால் சிக்கல்

பொள்ளாச்சி: அரசு பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழிக் கல்வியையும் கற்பிக்க வேண்டி உள்ளது. இந்நிலையில், ஆங்கில வழி கல்வி அனுமதி கோரினால், ஆசிரியர்களின் ஒப்புதல் கோரப்படுவதால், திட்டத்தை விரிவுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார பாகுபாடின்றி அனைவருக்கும் கல்வியை வழங்க, மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், ஆங்கில வழிக் கல்வி முறை நடைமுறையில் உள்ளது.
அதன்படி, பெரும்பாலான அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கடந்த 2013--14-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதல் வகுப்பில் தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் படிப்படியாக 5ம் வகுப்பு வரையில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டது.
அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 563 துவக்கப் பள்ளிகள் உள்ள நிலையில், 179 பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற மாணவர்கள் பயனடைந்தும் வருகின்றனர்.
தொடக்கப் பள்ளிகளை பொறுத்தமட்டில், ஆங்கில வழிக்கல்வி கற்பிக்க தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ் வழிக் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களே ஆங்கில வழிக் கல்வியையும் கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இரு ஆசிரியர்கள் கொண்ட பள்ளிக்கு, இத்திட்டம் எடுத்துச் செல்லப்படாமல் உள்ளது.
இதேபோல, கோவை வருவாய் மாவட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, 1,210 பள்ளிகளில், 900 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
அரசின் சில விதிகளால், அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த முடியாமல் தலைமையாசிரியர்கள் திணறி வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அதன்படி, அரசு பள்ளியில், ஆங்கில வழிப்பிரிவுகளில், ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம், 15 மாணவர்கள் இருத்தல் வேண்டும்.
எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருந்தால் அந்த மாணவர்களை அருகே உள்ள வேறு பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவில் சேர்க்க வேண்டும். அவ்வாறு, பள்ளியில் அனுமதி கோரினால், ஆங்கில வழிக் கல்வியில் பயிற்றுவிக்க, அந்தந்த பள்ளி ஆசிரியர்களையே பணியமர்த்த வேண்டும்.
அதாவது, 'மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட வகுப்புகளை இரு பிரிவுகளாக பிரித்து பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களே பாடம் நடத்த வேண்டும்.
ஆங்கில வழிக் கல்வி துவங்கிய பின் கூடுதல் பணியிடம் உருவாக்க திடீரென கோரக் கூடாது,' என்ற ஒப்புதல் கடிதம் தலைமையாசிரியரிடம் பெற்ற பின்னரே பள்ளிக் கல்வித்துறையால் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆங்கில வழியில் கற்பிக்க ஆசிரியர் நியமனம் காலதாமதமாகும் நிலையில் ஒரே ஆசிரியரே, தமிழ், ஆங்கில வழிக் கல்வியை கற்பிக்க வேண்டியிருப்பதால் பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு, 8 பாட வேளைகள் என, வாரத்திற்கு, 40 பாட வேளைகள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதில், ஒவ்வொரு ஆசிரியரும், 28 பாட வேளை நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கூடுதல் வேலை பளு ஏற்படும் என்ற சூழலால், அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த முடியாமல் உள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
பயங்கரவாதிகளிடம் இரக்கம் காட்டக்கூடாது: அமித் ஷா
-
ஹிந்தியை தடை செய்யும் மசோதா வெறும் வதந்தி அல்ல; சொல்கிறார் அண்ணாமலை
-
'தினமலர்' எனது தமிழ் ஆசிரியர்
-
‛நிறைய எழுது; படிப்பிலும் கவனம் செலுத்து' என்று என் வாழ்வை வளமாக்கியவர் டி.வி.ராமசுப்பையர்
-
ஹெலிகாப்பட்டரில் எடுத்த படங்கள்! விற்றுத்தீர்ந்த பிரதிகள்!
-
சட்டசபையில் நயினாருக்கு இன்ப அதிர்ச்சி: புகழ்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!