நாகப்பாம்புடன் சண்டையிட்டு எஜமானியை காப்பாற்றியது வளர்ப்பு நாய்!

திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவில், தனது உரிமையாளரை பாதுகாப்பதற்காக, வளர்ப்பு நாய் நாகப்பாம்புடன் சண்டையிட்டுக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் ஆலப்புழாவில், துஷாரா என்பவர் ராக்கி என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார். அவரது வீட்டு முற்றத்தில், துஷாரா இருந்த நிலையில், அங்கு நாகப்பாம்பு ஊர்ந்து வந்தது. அதைக்கண்ட வளர்ப்பு நாய், பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டது. இதில், பாம்பு பல முறை கொத்தியதில் நாய்க்கு காயம் ஏற்பட்டது.
இருந்தபோதும், சண்டையில் இருந்து பின் வாங்காத நாய், பாம்பை கடித்துக் கொன்று விட்டது. பாம்பின் விஷத்தால் நாய்க்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக உடனடியாக அதை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைக்கு துஷாரா கொண்டு சென்றார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிபின் பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரின் மேற்பார்வையில் பல நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு, ராக்கி குணமடையத் தொடங்கி உள்ளது.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு, வெளிநாட்டில் பணிபுரியும் துஷாராவின் கணவர் சுபாஷ் கிருஷ்ணா வீடு திரும்பினார். தனது மனைவியை காப்பாற்றிய ராக்கியைக் காண ஓடோடி மருத்துவமனை சென்றார்.
தற்போது அவர் ராக்கி நாயை பிள்ளை போல் பாதுகாத்து வருகிறார். ராக்கியின் துணிச்சலும், எஜமானியை காப்பதற்காக ஆக்ரோஷமாக சண்டையிட்டதும், அக்கம் பக்கத்தினர் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளது. அனைவரும் ராக்கியை ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.
ராக்கியின் துணிச்சலான செயல் குறித்து உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே!







