நதியில் குதித்து தற்கொலை நாடகம்: குஜராத் தொழிலதிபரின் செயலால் போலீஸ் அதிர்ச்சி

பாலக்காடு: கேரளாவில் நதியில் குதித்து தற்கொலை செய்வதாக மனைவிக்கு போட்டோ அனுப்பி நாடகம் ஆடிய குஜராத் தொழிலதிபரை போலீசார் கண்டுபிடித்தனர்.

குஜராத்தை சேர்ந்தவர் ஹுனானி சிராஜ் அகமது பாய். தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். ரப்பர் பேண்டுகள் சம்பந்தப்பட்ட வணிக ஒப்பந்தத்திற்காக செப்டம்பர் 17 அன்று கேரள மாநிலம் ஷோரனூருக்கு வந்தார்.
வந்தவருக்கு, மீண்டும் சொந்த ஊர் சென்றால் தன் 50 லட்சம் ரூபாய் கடன், பெரும் பிரச்னையை உண்டாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டது. கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க தற்கொலை செய்து கொள்ளப் போவதாக, நாடகம் ஆட முடிவு செய்தார்.

பாலக்காட்டில் உள்ள செருதுருத்தி பாலத்தில் இருந்து பாரதப்புழா நதியின் புகைப்படத்தை எடுத்து, தான் குதிக்கப் போவதாகக் கூறி தனது மனைவிக்கு அனுப்பினார். பின்னர் அவர் தனது தொலைபேசியை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டார்.

உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீயணைப்புப் படை, செருத்துருத்தி நிலா படகுக் கழகம் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுக்களின் உதவியுடன் ஆற்றில் மூன்று நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

எந்தப் பலனும் இல்லாததால் போலீசார் சந்தேகமடைந்தனர். அவரது மொபைல் போன் செயல்பாடுகளை கண்காணித்த போலீசார், ஹுனானி சிராஜ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பதாக கண்டறிந்தனர்.
அங்குள்ள சிசிடிவி காட்சிகள் உதவியுடன் ஒரு லாட்ஜுக்குள் செல்லும்போது அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். அங்கு அவர் டிரைவராகப் பணிபுரிந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.

விசாரணையின் போது, ​​கடன் கொடுத்தவர்களை எதிர்கொள்ள பயந்து தற்கொலை நாடகம் ஆடியதாக ஹுனானி சிராஜ் ஒப்புக்கொண்டார். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

Advertisement