மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு; இலங்கை பிரதமர்

புதுடில்லி: இந்தியா மற்றும் இலங்கை இடையேயான மீனவர்கள் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் டில்லியில் பேசியதாவது; இலங்கையின் பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அதிகம். 1998ம் ஆண்டு முதல்முறையாக இருநாடுகளுக்கு இடையேயும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது எங்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கியது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயல்படுவது குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையின் மீண்டும் தொடங்க உறுதி பூண்டுள்ளோம்.
விக்சித் பாரத்தின் கீழ் இந்தியா தன்னை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்த முயற்சிக்கிறது. அதேவேளையில், ஜவுளி, மின்னணுவியல் மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இலங்கை முழு உற்பத்தி தளமாக விளங்கும்.
உலகளவில் இந்தியாவின் ஏற்றுமதி,இறக்குமதி வணிகத்திற்கு இலங்கை துறைமுகங்கள் எப்போதும் சாதகமான நுழைவு வாயிலாக இருக்கும். இந்தியா விக்சித் பாரத் இலக்கை அடைய, அண்டை நாடான இலங்கை உறுதுணையாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு, எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை தொடர்வோம். உலகளவில் நிலவும் பொதுவான சவால்களுக்கு ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம்.
உலகளவில் இருதரப்பு உறவுகள் எப்போதும் சவால்கள் மிகுந்தவை தான். இதில், இந்தியா - இலங்கை மட்டும் விதிவிலக்கல்ல. வடக்கு இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய மீனவர்களின் அடித்தள இழுவை மீன்பிடிப்பு முறை மிகவும் கவலையளிக்கிறது. மீனவர்கள் பிரச்னைக்கு இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காண உறுதி பூண்டுள்ளன.
நட்பு மற்றும் பரஸ்பர அணுகுமுறையின் மூலம் இருநாடுகளுக்கு இடையேயுள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்று நான் நம்புகிறேன், இவ்வாறு அவர் கூறினார்.