பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி 'ஸ்வீட்'; ரூ.705 வசூலிப்பதாக முகவர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி, பால் உற்பத்தியாளர்களுக்கு, இனிப்பு, காரம், நெய்யை வலுக்கட்டாயமாக வழங்கி, பால் கொள்முதல் பணத்தில் பிடித்தம் செய்யும் ஆவின் நிர்வாகத்திற்கு, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின், பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமன்றி, பண்டிகை காலங்களில், இனிப்பு, கார வகைகளையும் தயாரித்து விற்பனை செய்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில், இனிப்பு, கார வகைகள் விற்பனையில் சாதனை படைப்பதாக கூறும் ஆவின், பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள், அப்பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறது.
தமிழகம் முழுதும், 9,200 கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில், 4.27 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, 500 கிராம் இனிப்பு, 250 கிராம் காரம், 500 மி.லி., நெய் போன்றவற்றை வலுக்கட்டாயமாக கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி, அவற்றை பால் உற்பத்தியாளர்களுக்கு விற்க வேண்டும் என, ஆவின் நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது.
அவர்கள் அதை உறுப்பினர்களுக்கு வழங்கி, அதற்குரிய, 705 ரூபாயை, கொள்முதல் செய்த பாலுக்கான தொகையில், பிடித்தம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், தீபாவளி பண்டிகைக்கு ஆவின், 30 கோடி ரூபாய் பெற்று உள்ளது.
ஆனால், ஆவினுக்கு பால் வழங்குவோருக்கு, இப்பண்டிகை கசப்பானதாக, மன உளைச்சல் நிறைந்ததாக மாறியுள்ளது. இதற்கு காரணமான, ஆவின் நிர்வாகத்தை கண்டிக்கிறோம்.
ஆவினின் இந்த போக்கை, தமிழக முதல்வர் தடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


மேலும்
-
போர்க்கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி; எனது அதிர்ஷ்டம் என பெருமிதம்!
-
சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை
-
சமூக பணியில் ஈடுபடுவோரை ஊக்குவிக்கிறது 'தினமலர்' நாளிதழ்
-
ஒவ்வொரு வாசகரையும் இப்போது போல் நுாறாண்டுகள் கடந்தும் 'தினமலர்' திருப்திபடுத்தும்
-
டில்லியில் விமானத்தில் பற்றி எரிந்த திடீர் தீ… அலறிய பயணிகள்
-
பொய்யான வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை; எச்சரிக்கிறது ரயில்வே அமைச்சகம்