தீபாவளி கொண்டாட்டம்

'மிதமானது' காற்று மாசு

சென்னை போன்ற நகரங்களில் காற்றின் மாசு அளவு, தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி முடிந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி, காற்று மாசு அளவு விபரங்களை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று காலை நிலவரப்படி, சராசரி காற்று மாசு அளவு, 152 என தரக்குறியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அளவு 'மிதமான' மாசு என்பதை குறிப்பதாக அமைந்துள்ளது.

அதேநேரம், சென்னை பெருங்குடியில், 229; மணலியில், 175; மணலி புதுநகர், வேளச்சேரியில் தலா, 152; அரும்பாக்கத்தில், 146; ஆலந்துாரில், 127 என, காற்று மாசு தரக்குறியீடு பதிவாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் 42 என காற்று மாசு தரக்குறியீடு பதிவானது.

ஒலி மாசு சென்னையில், அதிகபட்சமாக திருவொற்றியூரில், 88.4 டெசிபல் ஒலி மாசு பதிவானது. அதற்கு அடுத்தபடியாக திருவல்லிக்கேணியில், 84.8; நுங்கம்பாக்கத்தில், 83.1; சவுகார்பேட்டை,82.2; பெசன்ட் நகர், 62.8 டெசிபல் என்ற அளவில் ஒலி மாசு பதிவானது. இப்பகுதிகளில் இயல்பான நாட்களில், ஒலி மாசு அளவு, 50 முதல் 65 டெசிபல் அளவுக்கு பதிவாகும்.



பட்டாசு விபத்தில் 157 பேர் காயம்

தீபாவளி அன்றும், அதற்கு முந்தைய நாளும், சென்னையில் பட்டாசு வெடித்தபோது, 157 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். இதில், 44 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக 13 பேர்; புறநோயாளியாக 20 பேர்; ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக இருவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், உள்நோயாளியாக 6 பேர்; புறநோயாளியாக 24 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

 ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருவர், புறநோயாளியாக 3 பேர்; அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக 16 பேர், புறநோயாளியாக 32 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேபோல் தமிழக முழுதும் பாட்டாசு வெடித்த போது தீ காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனைகளில் 584 பேர் புறநோயாளியாகவும் 324 பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.



319 பேர் மீது வழக்கு பதிவு

தீபாவளி திருநாளன்று, காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 20ம் தேதி முதல் நேற்று காலை வரை நடத்தப்பட்ட ஆய்வில், தடை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 தாம்பரம் போலீஸ் கமிஷனரக பகுதியில், நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக, 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



2.25 லட்சம் கிலோ பட்டாசு கழிவு அகற்றம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள், நேற்று விட்டு விட்டு பெய்த மழைநீரில் நனைந்து, தரையோடு ஒட்டி கிடந்தன. பல தெருக்களில், மழைநீருடன் அடித்து சென்ற பட்டாசு கழிவுகள், வடிகால் ஜல்லடைகளில் சேர்ந்து அடைப்பு ஏற்படுத்தியது. தெருக்களில் பல மணி நேரம் வெள்ளம் தேங்கி நின்றது.

நள்ளிரவு முதல் குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், மூன்று நாட்களாக, 2.25 லட்சம் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த கழிவுகள், கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாய கழிவுகள் அழிக்கும் மையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

 தாம்பரம் மாநகராட்சியில் 70,000 கிலோ, ஆவடி மாநகராட்சியில் 27,000 கிலோ பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.



வெறிச்சோடிய கோயம்பேடு சந்தை

கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறி, கனி மற்றும் பூ வரத்து உள்ளது. இங்கு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால், கோயம்பேடு சந்தை நேற்று ஆரவாரமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement