இரண்டு நாள்கூட தாக்கு பிடிக்காத 'பேட்ச் ஒர்க்' சென்னை சாலைகளில் வாகனங்கள் 'சாகசம்'

சென்னை: மாநகராட்சி அவசர கதியில் சாலையில் மேற்கொண்ட, 'பேட்ச் ஒர்க்' இரண்டு நாட்கள்கூட தாக்கு பிடிக்காததால், வாகன ஓட்டிகள் சாகசம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி வாயிலாக, 387 கி.மீ., பேருந்து வழித்தட சாலைகள், 5,623 கி.மீ., உள்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 479 கி.மீ., சாலைகள், சமீபத்தில் சீரமைக்கப்பட்டன.

சாலைகள் சேதம் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில், சென்னையில், 283 கி.மீ., சாலைகள் உள்ளன. இவற்றில் பல சாலைகளில் மெட்ரோ ரயில்வே கட்டுமான பணிகள், பூமிக்கு அடியிலும், மேற்பரப்பிலும் நடந்து வருகின்றன. இதனால், முக்கிய சாலைகள் சேதமடைந்து உள்ளன.

மாநகராட்சி சாலை களிலும், பல இடங்களில், மெட்ரோ ரயில்வே பணிகள் நடந்து வருவதால், இந்த சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அண்ணா சாலையில் பாலப்பணிகள் நடந்து வருகின்றன.

இப்பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் வாயிலாக, சேதம் அடைந்த சாலைகளில், அவசர கதியில். 'பேட்ஜ் ஒர்க்' செய்யப்பட்டுள்ளது.

தரம் குறைந்த தார் கலவையை வைத்து, ஈரப்பதம் உள்ள சாலைகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இரண்டு நாட்கள்கூட அவை தாக்குப் பிடிக்கவில்லை.

பல இடங்களில் புதிய தார்கலவை பெயர்ந்து, பள்ளங்கள் உருவாகி உள்ளன. ஜல்லிகற்கள் சிதறி கிடக்கின்றன. இவற்றில் சாகசம் செய்தபடி, வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

ஆலோசனை டிசம்பர் வரை மழை இருக்கும். எனவே, முழுமையாக சாலை போட முடியாவிட்டாலும், இரு மாதங்கள் தாக்கு பிடிக்கும் அளவிற்காவது, 'பேட்ச் ஒர்க்' சாலைகளை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், சேதமடைந்த சாலைகளில், நவீன இயந்திரத்தை பயன்படுத்தி, ஈரத்தை உலர்த்தி 'பேட்ஜ் ஒர்க்' சாலை அமைப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement