குமரியை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்டவர் டி.வி.ஆர்.,: தமிழ் முழக்க பேரவையில் பாராட்டு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழ் முழக்க பேரவையின் 182வது நிகழ்ச்சி, பாளை தெற்கு பஜார் சைவ சபை அரங்கில் நேற்று மாலை நடந்தது. தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா தலைமை வகித்தார். தமிழ் முழக்க பேரவை செயலர் நசீர் முன்னிலை வகித்தார்.
இணைச்செயலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். திருவருட்பிரகாச வள்ளலாரின் தமிழ் தொண்டு குறித்து திருநெல்வேலி ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயமேரி பேசினார்.
இசை நாடக செம்மல் கே.பி.சுந்தராம்பாள் குறித்து டான் போஸ்கோ பள்ளி தமிழாசிரியர் ஜனனி பேசினார்.
தமிழ் வீரர், 'தினமலர்' நிறுவனர் டி.வி.ராம சுப்பையர் குறித்து தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா பேசிய தாவது: டி.வி.ராம சுப்பையர் நாஞ்சில் நாட்டில் பிறந்தவர். மொழி வழி மாநிலங்கள் பிரிக்கும் போது, கன்னியா குமரியை தமிழகத்தோடு இணைப்பதற்கான முயற்சியில் டி.வி.ராம சுப்பையர் மிகுந்த முயற்சி மேற்கொண்டார். அவர், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்பட்டார்.
நாகர்கோவில் நகராட்சி தலைவராக வேண்டும் என எண்ணம் கொண்டார்; அது நடக்கவில்லை. இருப்பினும், மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க ஒரு பத்திரிகையை துவக்கி, அதன் மூலம் குரல் கொடுத்தார்.
இவரது தொடர்ந்த எழுத்துக்களாலும், முயற்சியாலும் தான் ம.பொ.சி., தலைமையில் சென்னையில் எல்லை மாநாடு நடந்தது.
தென் திருவிதாங்கூரை பட்டம் தாணுப்பிள்ளை, கொடுங்கோல் ஆட்சி புரிந்தார். 1954 ஆக., 11ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில், 10 பேர் இறந்தனர்.
கேரள பல்கலையில் தமிழாசிரியர்களுக்கு உரிய மரியாதை, மதிப்பு கிடைக்கவில்லை. கேரள பல்கலையில் வெறும் விரிவுரையாளர்கள் மட்டுமே இருந்தனர். அங்கு பேராசிரியர்கள் பணியிடம் வேண்டும் என போராடியவர் டி.வி.ராமசுப்பையர். அவரது முயற்சிகளுக்கு பின் பேராசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவ்வாறு பேராசிரியரானவர் தான் வையாபுரி பிள்ளை.
ரயில் தடத்தையே பார்க்காத கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் பாதை வரவும், ரயில் இயக்கவும் பெரும் முயற்சி எடுத்தவர் டி.வி.ராமசுப்பையர். இதற்காக அப்போதைய ரயில்வே அமைச்சர் ஓ.வி.அழகேசனை சந்தித்து முயற்சி மேற்கொண்டார்.
கன்னியாகுமரியில் ஐந்தாம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்விக்கு டி.வி.ஆர்., முயற்சி மேற்கொண்டார். இதற்காக அப்போதைய கல்வி இயக்குநர் ஏ.என்.தம்பியுடன் இணைந்து செயலாற்றினார். கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்தில் கல்வியில் முதல் மாவட்டமாக திகழ்வதற்கு டி.வி.ஆரின் இந்த முயற்சிகள் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, வழக்கறிஞர் ஐ.முருகேசன் எழுதிய, 'இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 2023' என்ற சட்ட நுாலை வழக்கறிஞர் சுந்தரம் வெளியிட, எழுத்தாளர் செ.திவான் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில், பேராசிரியர்கள் சுதாகர், ஆறுமுகம், முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன், ஆசிரியர் கணபதி சுப்ரமணியம், பேரா.மகாலட்சுமி, சேரை பாலகிருஷ்ணன், முனைவர் முருகன், ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
வாரிசுகளுக்காக அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் காங்., ஆர்ஜேடி; அமித் ஷா விளாசல்
-
ஓட்டுக்காக எதையும் செய்வார் மோடி: சொல்கிறார் ராகுல்
-
குமாரபாளையம் கல்லூரியில் 128 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
-
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
இந்தியா-ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி உறுதி
-
அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை