அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

5

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: துணை ஜனாதிபதி ஆன பிறகு முதன்முறையாக கோவை, திருப்பூர் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. உழைப்பு ஒருபோதும் வீணாகாது; திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சந்தித்து வரும் அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.


அமெரிக்காவின் ஏற்றுமதி எதிர்காலத்தில் இரண்டு மடங்காக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும். தொழில் துறையினர் நம்பிக்கை இழக்க வேண்டாம். அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அவிநாசி அப்பன் அருளால் நான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.


பிரதமர் மோடி என்ன பேசுகிறார் என உலகம் உற்று நோக்குகிறது. சிறப்பான காலங்களும், கடின காலங்களும் வரும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் வெல்லலாம். சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதே எப்போதும் நமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Advertisement