ஓட்டுக்காக எதையும் செய்வார் மோடி: சொல்கிறார் ராகுல்

4

பாட்னா: பீஹார் தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல், ' பிரதமர் மோடி ஓட்டுக்காக எதையும் செய்வார்' என்றார்.

பீஹாரில் வரும் நவம்பர் 6, 12 ஆகிய இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நவம்பர் 14ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலுக்கு ஒருவார காலம் மட்டுமே உள்ள நிலையில், பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணியும், ஆர்ஜேடி தலைமையிலான இண்டி கூட்டணியும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில் இன்று பீஹார் மாநிலம் முஷாபர்பூரில் ஆர்ஜேடி தலைவரும், முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் உடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது ராகுல் அதிகமாக விமர்சிக்கவில்லை.

தேர்தல் பிரசார பேரணியில் ராகுல் பேசியதாவது:
பிரதமர் மோடி, ஓட்டுக்காக எதையும் செய்கிறார்.சமீபத்தில் முடிவடைந்த சத் பூஜை, பீகாரிகளின் மிகப்பெரிய பண்டிகை. இந்த பண்டிகைக்காக, பிரதமருக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட குளத்தில் மோடி நீராடினார்.ஆனால், டில்லியில் பக்தர்கள் பிரார்த்தனைக்காக, மாசுபட்ட யமுனையில் நீராடினர்.

நரேந்திர மோடி தனக்கான நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்றார். அவருக்கும் யமுனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கும் சத் பூஜைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் மக்களின்(உங்கள்) ஓட்டுக்களை மட்டுமே விரும்புகிறார், ஓட்டுக்காக எதையும் செய்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அவர் செய்வார்.
இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement