37 மாவட்ட செயற்குழு; அன்புமணிக்கு எதிராக அதிரடி காட்டும் ராமதாஸ்

சென்னை: வரும் நவம்பர் 1ம் தேதி ஒரே நாளில், 37 மாவட்ட செயற்குழுவை நடத்தி, அதன் தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளார்.

மகனும் பா.ம.க., தலைவருமான அன்புமணியுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, புதிய நிர்வாகிகளை நியமித்து, தனியாக செயல்பட்டு வருகிறார் ராமதாஸ்.

பா.ம.க., தலைவராக அன்பு மணியை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. இதை எதிர்த்து, தன் தலைமையிலான பா.ம.க.,வை அங்கீகரிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனில் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.

இந்நிலையில், 'வரும் நவம்பர் 1ம் தேதி, ஒரே நாளில், புதுச்சேரி உட்பட, 37 மாவட்டங்களின் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்படும்' என, ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி சென்னையிலும், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி கடலுாரிலும், வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி அரியலுாரிலும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் தஞ்சையிலும் நடக்கும் செயற்குழுவில் பங்கேற்க உள்ளனர்.

ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையானது என்றும், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்க ராமதாசுக்கு மட்டுமே அதிகாரம் என்றும், அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும், அதே செயற்குழு கூட்டத்தில், செயல் தலைவர் ஸ்ரீகாந்தி நியமனத்திற்கு ஒப்புதலும் பெறப்பட உள்ளது.

இந்த தீர்மானங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்து, ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.,வை அங்கீகரித்து, மாம்பழம் சின்னத்தை ஒதுக்கக்கோரி மனு அளிக்க இருப்பதாக, ராமதாஸ் ஆதரவு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement