தங்கவயல் நகராட்சி பதவிக்காலம் நீடிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தங்கவயல்: தங்கவயல் நகராட்சியின் பதவிக்காலம் நாளை நிறைவடையும் நிலையில், பதவிக்காலம் நீடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் கர்நாடக உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தங்கவயல் நகராட்சிக்கு 2019 நவம்பர் 12ல் தேர்தல் நடந்தது. நவம்பர் 15ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 2020 அக்டோபர் 31ல் முதல் 30 மாதங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது.

தலைவராக வி.முனிசாமி, துணைத் தலைவராக தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 2023 ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

கடந்த 2023 மே 1ம் தேதி முதல் நிர்வாக அதிகாரியாக கோலார் மாவட்ட கலெக்டர் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2024 ஆகஸ்ட் 13ல் இரண்டாம் கட்ட 30 மாதங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தலைவராக இந்திரா காந்தி துணைத் தலைவராக ஜெர்மன் ஆகியோர் பதவி ஏற்றனர்.

இவரது பதவிக் காலம் முறையாக 30 மாதங்களில் முடிய வேண்டும். ஆனால் 14 மாதங்களிலேயே முடிவதாக தெரிய வந்துள்ளது. இதனால் இதை எதிர்த்து, 'எங்களது பதவிக்காலம் 30 மாதங்கள் இருக்க அனுமதிக்க வேண்டும்' என, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பி.பி.ரமேஷ் குமார், வி.முனிசாமி, தஸ்லின்பானு, ஜி.கருணாகரன் உட்பட தங்கவயலின் 34 நகராட்சி கவுன்சிலர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு இன்று ஏற்கப்பட்டு தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தங்கவயல் நகராட்சி கவுன்சிலின் பதவிக்காலம் நீடிப்பதாக கவுன்சிலர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement