வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா

26


வாஷிங்டன்: வெளிநாட்டவர்களின் வேலைக்கான அனுமதியை தானாக நீட்டிப்பு செய்யும் முறையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு தடாலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அமெக்காவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதில் அவர் திட்டவட்டமாக உள்ளார்.

இந்த நிலையில், வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கான இஏடி எனப்படும் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை தானாக நீட்டிக்கும் வசதியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'அக்.,30 மற்றும் அதற்கு பிறகு வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு, இனி தானியங்கி மூலம் நீட்டிப்பு வழங்கப்படாது. பொதுமக்கள் மற்றும் தேசிய பாதுகாப்பைக் காக்கும் விதமாக, மேலாண்மை மற்றும் தணிக்கையை அரசு முன்னுரிமையாகக் கொண்டுள்ளது,' என தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் தங்கள் வேலைக்கான அனுமதி காலம் முடிந்த பின்னரும், கூடுதலாக 540 நாட்கள் அமெரிக்காவில் பணியாற்ற, முந்தைய பைடன் அரசு நிர்வாகம் அனுமதியளித்திருந்தது. தற்போது, அந்த நடைமுறைக்கு மாற்றாக, இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

டிரம்ப் அரசின் இந்த உத்தரவால், வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்கு பெருமளவில் பணியாற்றும் இந்தியர்களுக்கே பாதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement