பண்டிப்பூர், நாகரஹொளேயில் கடைசி 'சபாரி' பயணம் ரத்து

சாம்ராஜ் நகர்: மனித - விலங்கு மோதல் அதிகரித்து வருவதால், பண்டிப்பூர் புலிகள் சரணாலயத்தில் செல்லும் ஒரு 'சபாரி' பயணத்தை குறைக்கும்படி அதிகாரிகளுக்கு, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வனத்துறையினருக்கு அமைச்சர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பண்டிப்பூர், நாகரஹொளே புலிகள் வனப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் 'சபாரி' செல்லும் வாகனங்களின் பயணமும் அதிகரித்துள்ளது.

வனப்பகுதிக்குள் வாகனங்கள் மாலை 6:00 மணிக்கு பின்னரும் இயங்குகின்றன. வாகனங்களின் சத்தம், வெளிச்சம் காரணமாக, வனத்தில் உள்ள விலங்குகள் கிராமப்புற பகுதிக்கு படையெடுக்கின்றன. எனவே, 'சபாரி' பயணத்தை நிறுத்த வேண்டும் என்று கிராமத்தினர், பல்வேறு விவசாய சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே, அக்., 28ம் தேதி முதல் தற்போது இயங்கும் 'சபாரி' பயணத்தில், ஒரு நடையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக, பண்டிப்பூரில் 5 ஜிப்சிக்கள், 5 கேம்பர்கள், 7 மினி பஸ்கள் என, 17 வாகனங்களில் 'சபாரி' பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு வாகனமும் காலை 6:30, 8:00 மணிக்கு என, இரண்டு 'சபாரி' பயணங்களும்; மதியம் 2:30, 3:30, மாலை 5:00 மணிக்கு மூன்று 'சபாரி' பயணங்கள் இயக்கப்படுகின்றன.

அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவின்படி, இனி மாலை 5:00 மணி, 'சபாரி' பயணம் இயங்காது.

Advertisement