பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி நுரையீரல், இதயம் பயணம்

1

பெங்களூரு: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, பெங்களூரின் கோரகுண்டேபாளையாவில் இருந்து பொம்மசந்திராவுக்கு மெட்ரோ ரயிலில் ஒரு ஜோடி நுரையீரல், இதயம் எடுத்துச் செல்லப்பட்டன.

கர்நாடகாவின் பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் செல்வோர் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

அதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, உடல் உறுப்புகளை எடுத்துச் செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

'ஜீரோ டிராபிக்' போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு, உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன. அதன் பின் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. இந்த குறையை தற்போது மெட்ரோ ரயில் நீக்கி உள்ளது.

அவசர தேவையாக உடல் உறுப்புகளை, மெட்ரோ ரயிலில் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.

பெங்களூரின் பொம்மசந்திரா நாராயணா ஹெல்த் சிட்டியில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு ஜோடி நுரையீரல் தேவைப்பட்டது. இதுபோல இன்னொரு நோயாளிக்கு இதயம் தேவைப்பட்டது.

ஒரு ஜோடி நுரையீரலும், இதயமும் கோரகுண்டேபாளையாவில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் இருந்து, நாராயணா ஹெல்த் சிட்டிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

நேற்று காலை ஸ்பார்ஷ் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் குளிரூடப்பட்ட பெட்டிகளில் நுரையீரல், இதயத்துடன், கோரகுண்டேபாளையாவில் இருந்து மெட்ரோ ரயிலில் காலை 9:34 மணிக்கு புறப்பட்டனர்.

ஆர்.வி.ரோடு மெட்ரோ ரயில் நிலையத்தை 9:59 மணிக்கு அடைந்தனர். அங்கிருந்து 10:10 மணிக்கு இன்னொரு மெட்ரோ ரயிலில் ஏறி 10:34 மணிக்கு பொம்மசந்திராவை அடைந்தனர்.

அங்கிருந்து மருத்துவமனைக்கு நுரையீரல், இதயம் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டன.

மெட்ரோ ரயில் மூலம் கோரகுண்டேபாளையாவில் இருந்து பொம்மசந்திராவை 30 முதல் 33 கி.மீ., துாரத்திற்கு 61 நிமிடங்களில் கடந்ததாகவும், இதன்மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனை கூறி உள்ளது.

Advertisement