'எங்களை எப்படி தடுத்து நிறுத்த முடியும்?'; அமெரிக்க துணை அதிபரிடம் இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி

2

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் குடிவரவு கொள்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய இந்திய வம்சாவளி மாணவி, "நீங்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளோம். அப்படியிருக்கையில் எப்படி உங்களால் தடுத்து முடியும்?," என்று கேட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து, வெளிநாட்டவர்களின் விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிந்து, அவர்களை நாடு கடத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், மிசிசிப்பி பல்கலையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம், குடிவரவு கொள்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து இந்திய வம்சாவளி மாணவி சரமாரி கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது; அமெரிக்காவில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக நீங்கள் பேசுகிறீர்கள். நீங்கள் எங்களின் இளம்வயது, எங்களின் செல்வத்தை இந்த நாட்டில் செலவழிக்க வைத்து, எங்களுக்கு ஒரு கனவைக் கொடுத்தீர்கள். நீங்கள் எங்களுக்கு எதுவும் கடன்பட்டவர்கள் அல்ல. அதற்காக நாங்கள் கடினமாக உழைத்திருக்கிறோம்.

'புலம்பெயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை வெளியேற்றப்போகிறோம்' என்று துணை அதிபராக இங்குள்ள மக்களிடம் எப்படி சொல்ல முடியும்? நீங்கள் கேட்ட பணத்தை நாங்கள் செலுத்தியுள்ளோம். நீங்கள் எங்களுக்கு வழி காட்டினர்கள், இப்போது அதை எப்படி நிறுத்த முடியும்?, இவ்வாறு காரசாரமாக கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக் கேட்டு அரங்கில் கூடியிருந்தவர்கள் கைகளை தட்டினர்.

உடனே சுதாரித்துக் கொண்ட ஜே.டி.வான்ஸ், "இங்கு நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஏதும் நடக்கவில்லை. கவலைப்பட வேண்டாம். அதிகமான மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது அமெரிக்காவின் சமூகக் கட்டமைப்பிற்கு அச்சுறுத்தல். ஒருவர் அல்லது 10 பேர் அல்லது 100 பேர் சட்டவிரோதமாக இங்கு வந்த அமெரிக்காவுக்கு பங்களிப்பு கொடுத்தால், எதிர்காலத்தில், 10 லட்சம் அல்லது ஒரு கோடி பேரை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருப்பதாக அர்த்தமாகி விடுமா? அது தவறானது," என்றார்.

Advertisement