பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி; கட்டுமான பணியை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

30


சென்னை: சதுப்பு நிலமான பள்ளிக்கரணை பெரும்பாக்கத்தில் பிரிகேட் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சர்வதே அளவில் 'ராம்சார்' தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக அமைந்த இந்த நீர் நிலை, மழைநீரை உள்வாங்கும் திறன் கொண்டது. இதை அழிக்கும் பட்சத்தில், நகருக்குள் வெள்ளம் வரும் அபாயம் இருக்கிறது. இதனால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.

சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் காரணமாக, அங்கு கட்டுமான பணிகள் செய்வதற்கு அனுமதி எதுவும் வழங்கப்படக் கூடாது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு எல்லை வரையறுக்கவில்லை என்று கூறியும், சதுப்பு நிலத்துக்கு வெளியே இருக்கும் பட்டா நிலம் என்று கூறியும், பிரிகேட் நிறுவனம் அடுக்குமாடி கட்ட அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி அறப்போர் இயக்கம் புகார் எழுப்பியது. கட்டுமானத்துக்கு அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீதும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த பிரச்னையை கையில் எடுத்தனர். கட்டுமானத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

இந்நிலையில், சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி கட்ட அனுமதி அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரியும் அதிமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி ப்ரஸ்நெவ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.



இந்த வழக்கு இன்று (அக் 31 ) ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ''கட்டப்படும் கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு 2 வாரத்தில் முடிவடையும்'' என வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

பின்னர் ஐகோர்ட் நீதிபதிகள் கூறியதாவது:





* சுப்ரீம்கோர்ட், பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் சிஎம்டிஏ கட்டுமானத்துக்கு அனுமதித்தது எப்படி?


* பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணி மேற்கொள்ளக் கூடாது.


* நவம்பர் 12ம் தேதிக்குள் தமிழக அரசு, மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement