ஜோனா, ஜானிஸ் கலக்கல்: சென்னை ஓபன் டென்னிசில்

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு ஜோனா, ஜானிஸ் முன்னேறினர்.

சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, சீனதைபேயின் ஜோனா கார்லேண்டு மோதினர். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய ஜோனா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வசப்படுத்தினார்.

ஒரு மணி நேரம், 56 நிமிடம் நடந்த போட்டியில் ஜோனா, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.


மற்றொரு காலிறுதியில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், சுலோவாகியாவின் மியா போஹன்கோவா மோதினர். அபாரமாக ஆடிய ஜானிஸ் டிஜென் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மூன்றாவது காலிறுதியில் இத்தொடரின் 'நம்பர்-3' வீராங்கனை, குரோஷியாவின் டோனா வெகிச், ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெலை சந்தித்தார். இதில் வெகிச் 4-6, 0-6 என வீழ்ந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், மாயா ரேவதி ஜோடி 2-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் அல்டிலா சுட்ஜியாடி, ஜானிஸ் டிஜென் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

Advertisement