உலக விளையாட்டு செய்திகள்
காலிறுதியில் சின்னர்
பாரிஸ்: பிரான்சில் நடக்கும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோ மோதினர். இதில் சின்னர் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ரொனால்டோ மகன் அறிமுகம்
அன்டால்யா: துருக்கியில் நடக்கும் பெடரேஷன்ஸ் கோப்பை கால்பந்து (16 வயது) லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 2-0 என, துருக்கியை வீழ்த்தியது. இப்போட்டியின் 90வது நிமிடத்தில் ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானினோ 15, அறிமுகமானார்.
ஜெர்மனி முன்னேற்றம்
காசாபிளாங்கா: மொராக்கோவில், உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் (17 வயது) முதல் சீசன் நடக்கிறது. இதன் அரையிறுதியில் ஜெர்மனி அணி 39-32 என கத்தாரை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் எகிப்து அணி 31-28 என்ற கணக்கில் ஸ்பெயினை தோற்கடித்தது.
பென்சிக் விலகல்
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சா மோத இருந்தனர். ஆனால் தொடையில் ஏற்பட்ட காயத்தால் பென்சிக் விலகினார். புக்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
எக்ஸ்டிராஸ்
* போஸ்னியாவில் நடந்த சர்வதேச செஸ் தொடரில் 2வது இடம் பிடித்த இளம்பரிதி 16, இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றார். தவிர இவர், தமிழகத்தின் 35வது கிராண்ட் மாஸ்டரானார்.
* கோவாவில், செஸ் உலக கோப்பை 11வது சீசனுக்கான துவக்க விழா நடந்தது. கோப்பைக்கு 'விஸ்வநாதன் ஆனந்த் டிராபி' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 206 பேர் பங்கேற்கின்றனர்.
* கோவாவில் நடக்கும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் சென்னை, டெம்போ அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
* ஆஸ்திரேலியாவில் நடக்கும் நார்த் கோஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை ராதிகா 3-1 (9-11, 11-8, 11-8, 11-2) என நியூசிலாந்தின் மெய்டன்-லீ கோவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
* முன்னாள் இந்திய ஹாக்கி கோல்கீப்பர் மானுவல் பிரடெரிக் 78, உடல் நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார். கேரளாவின் கண்ணுாரில் பிறந்த இவர், முனிக் ஒலிம்பிக்கில் (1972) வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
* கோவையில் நடக்கவுள்ள (நவ. 1-4) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், விதர்பா அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியிடம் தோல்வியடைந்த தமிழகம், நாகலாந்துக்கு எதிரான 2வது போட்டியை 'டிரா' செய்தது.
மேலும்
-
50 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் நால்வர் கைது
-
20 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர் கைது
-
பாரதிய வித்யா பவனில் நாட்டிய விழா துவக்கம்
-
பல திட்டங்கள் இருந்தும் பராமரிப்பின்றி குடிநீர் வீணாகுது! குழாய் உடைப்பு,மின்தடையால் தவிக்கும் மக்கள்
-
பனை விதை நடும் பணி
-
சேதம் அடைந்த இடத்தில் வைக்கப்பட்ட பேரிகார்டு :தினமும் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்