இந்திய பெண்கள் அணிக்கு பாராட்டு: ஜெமிமா 'மேஜிக்' தொடருமா


நவி மும்பை: உலக கோப்பை பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு, சச்சின், கும்ளே, யுவராஜ், கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. நவி மும்பையில் நடந்த 2வது அரையிறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127*), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89) கைகொடுக்க, இந்திய அணி (341/5, 48.3 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை (338/10, 49.5 ஓவர்) வீழ்த்தியது. இதன்மூலம் பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் அதிக ரன்னை 'சேஸ்' செய்து வரலாறு படைத்த இந்திய அணி, 3வது முறையாக (2005, 2017, 2025) பைனலுக்கு முன்னேறியது. நவி மும்பையில் நடக்கவுள்ள பைனலில் (நவ. 2) இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை சந்திக்கிறது. இதில் ஜெமிமாவின் 'மேஜிக்' ஆட்டம் தொடர்ந்தால், இந்திய அணி முதன்முறையாக கோப்பை வெல்லலாம்.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு, இந்தியாவின் சச்சின், கும்ளே, கோலி உள்ளிட்டோர் சமூகவலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


சச்சின்: இது, அற்புதமான வெற்றி. பேட்டிங்கில் அணியை முன்னின்று வழிநடத்திய ஜெமிமா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பவுலிங்கில் நம்பிக்கை தந்த ஸ்ரீ சரணி, தீப்தி சர்மாவுக்கு வாழ்த்துகள். இந்திய அணியின் வெற்றி தொடர வேண்டும்.

கும்ளே: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சிறந்த வெற்றி இது. 127* ரன் விளாசி அணியை பைனலுக்கு அழைத்துச் சென்றது ஜெமிமாவின் அனுபவ பேட்டிங், நம்பிக்கையை வெளிப்படுத்தியது.
யுவராஜ் சிங்: ஸ்கோர்போர்டில் உள்ள நம்பர்களை தாண்டி பல வெற்றிகள் உள்ளன. இது அவற்றில் ஒன்று. நெருக்கடியான நேரத்தில், அமைதியுடனும், உறுதியுடனும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளையாடியதை உலகம் பார்த்துக் கொண்டிருந்தது. வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒரு இன்னிங்சை விளையாட வேண்டும் என்ற கவனத்துடன் ஜெமிமா விளையாடினார். இந்திய அணியினருக்கு வாழ்த்துகள்.


கோலி: ஆஸ்திரேலியா போன்ற ஒரு வலிமையான அணியை வீழ்த்தியது இந்தியாவின் மகத்தான வெற்றி. பெண்கள் ஒருநாள் போட்டி அரங்கில் சிறந்த 'சேஸ்' இது. முக்கிய போட்டியில் ஜெமிமாவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. வெற்றி தொடர வாழ்த்துகிறேன்.

சேவக்: அரையிறுதியில் இந்தியாவை எளிதாக சாய்த்து எளிதாக பைனலுக்கு முன்னேறிவிடலாம் என ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருந்தனர். ஆனால் அனைத்து கணிப்புகளையும் தகர்த்த இந்திய வீராங்கனைகள், சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். நமது வீராங்கனைகளால் இந்தியா பெருமைப்படுகிறது.


எச்சரிக்கை தந்த 'அவுட்'

ஆட்ட நாயகி விருது வென்ற இந்தியாவின் ஜெமிமா கூறுகையில், ''கேப்டனும், நானும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து, போட்டியில் வெற்றி பெற விரும்பினோம். எதிர்பாராமல் ஹர்மன்பிரீத் ஆட்டமிழந்தார். இவரது 'அவுட்' எனக்கு எச்சரிக்கை தந்தது. அப்போது சோர்வாக இருந்த நான், பின் மீண்டும் போட்டியில் கவனம் செலுத்தினேன். கூடுதல் பொறுப்புடன் செயல்பட்டு வெற்றிக்கு உதவினேன்,'' என்றார்.

Advertisement