லாலு கட்சி வென்றால் காட்டாட்சி வரும்; அமித்ஷா ஆருடம்

1

பாட்னா: “பீஹாரில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டாட்சி ராஜ்ஜியம் வரும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


பீஹாரின் சமஸ்திப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: நவம்பர் 6ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறும். அன்று பீஹாரின் ஆட்சி யாருடைய கைகளில் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளாக காட்டாட்சி ராஜ்ஜியத்தைப் பரப்பிய கைகளில் இருக்க வேண்டுமா அல்லது 20 ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி கையில் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

காட்டாட்சி ராஜ்ஜியம்




ஆர்ஜேடி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டாட்சி ராஜ்ஜியம் வரும். கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் குமாரும், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியும், நிதிஷ் குமாரும் இணைந்து பீஹாரின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் மீண்டும் திறக்கப்படும்.

2 முக்கிய விஷயங்கள்




கோபால்கஞ்ச் மக்கள் 2002ம் ஆண்டு முதல் ஆர்ஜேடிக்கு ஒருபோதும் ஓட்டளித்தது இல்லை. அவர்கள் இந்தப் போக்கைத் தொடர்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
எங்களது தேர்தல் வாக்குறுதியில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன.

இரண்டு லட்சம் ரூபாய்




விவசாயிகளுக்கான ஒன்று, பெண்களுக்கு ஒன்று, நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பெண் தொழில்முனைவோருக்கு 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும். பீஹாரின் 27 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறோம். இப்போது, ​​இதனுடன் ரூ.3,000 சேர்த்து, ரூ.9 ஆயிரம் வழங்குவோம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement