உலக விளையாட்டு செய்திகள்

ஜெர்மனி ஜெயம்
காசாபிளாங்கா: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. இதன் பைனலில் ஜெர்மனி, எகிப்து மோதின. இதில் ஜெர்மனி அணி 44-43 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


சின்னர் கலக்கல்
பாரிஸ்: பிரான்சில், பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கனடாவின் பெலிக்ஸ் அலியாஸ்சிமி மோதினர். இதில் சின்னர் 6-4, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.


அரையிறுதியில் பிரேசில்
ரபாட்: மொராக்கோவில் நடக்கும் பெண்கள் (17 வயது) உலக கோப்பை கால்பந்து காலிறுதியில் பிரேசில் அணி 5-4 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் கனடாவை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் வட கொரியா அணி 5-1 என ஜப்பானை தோற்கடித்தது.


மெஸ்ஸி ஆறுதல்
நாஷ்வில்லி: அமெரிக்கா, கனடாவில் நடக்கும் மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 'பிளே-ஆப்' சுற்றுக்கான 2வது போட்டியில் நாஷ்வில்லி அணி 2-1 என, இன்டர் மயாமி அணியை வீழ்த்தியது. மயாமி அணி சார்பில் மெஸ்ஸி, கடைசி நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.


எக்ஸ்டிராஸ்

* சென்னையில், தமிழக கிரிக்கெட் சங்கத்தின் 93வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் புதிய தலைவராக டி.ஜே. சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வானார். ஏற்கனவே இவர், பொருளாளராக பணியாற்றினார்.


* அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ் 60-54 என மெக்சிகோவின் ஜுவான் கார்லஸ் கம்போஸ் மெடினாவை வீழ்த்தினார். இதுவரை விளையாடிய 4 போட்டியிலும் நிஷாந்த் தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

* இந்திய கோல்கீப்பர் அரிந்தம் பட்டாசார்யா 35, தொழில்முறை கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதுவரை சர்ச்சில் பிரதர்ஸ், மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், இன்டர் காஷி அணிகளுக்காக விளையாடி உள்ளார்.


* ஆஸ்திரேலியாவில் நடக்கும் நார்த் கோஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 1-3 (10-12, 11-5, 3-11, 3-11) என்ற கணக்கில் எகிப்தின் லோஜைன் கோஹரியிடம் தோல்வியடைந்தார்.


* ஜோர்டானில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய அணி 0-3 (0-25, 0-25, 0-25) என, சீனதைபே அணியிடம் வீழ்ந்தது.


* ஜெர்மனியில் நடக்கும் ஹைலோ ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 7-21, 13-21 என இந்தோனேஷியாவின் புத்ரி வர்தானியிடம் தோல்வியடைந்தார்.

Advertisement