சபாஷ் வாஷிங்டன், அர்ஷ்தீப் சிங்: இந்திய அணி அசத்தல் வெற்றி

ஹோபர்ட்: மூன்றாவது 'டி-20' போட்டியில் வாஷிங்டன் சுந்தர் (49 ரன்*), அர்ஷ்தீப் சிங் (3 விக்.,) கைகொடுக்க, இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2வது போட்டியில் இந்தியா தோற்றது. மூன்றாவது போட்டி ஹோபர்ட் மைதானத்தில் நடந்தது.

மூன்று மாற்றம்: இந்திய அணியில் சாம்சன், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றனர். 'டாஸ்' வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.


டேவிட் மிரட்டல்: ஆஸ்திரேலிய அணி அர்ஷ்தீப் சிங் 'வேகத்தில்' அதிர்ந்தது. முதல் ஓவரில் 'ஆபத்தான' டிராவிஸ் ஹெட்டை (6) வெளியேற்றினார். அடுத்து ஜோஷ் இங்கிலிசை (1) அவுட்டாக்கி, தனது தேர்வை நியாயப்படுத்தினார். ஆஸ்திரேலியா 2.3 ஓவரில் 14/2 ரன் எடுத்து தவித்தது. பின் இந்திய பந்துவீச்சை சிதறடித்த டிம் டேவிட், 23 பந்தில் அரைசதம் எட்டினார். வருண் சக்ரவர்த்தி ஓவரில் (9வது) மிட்சல் மார்ஷ் (11), மிட்சல் ஓவன் (0) வரிசையாக அவுட்டாகினர். ஆஸ்திரேலியா 9 ஓவரில் 75/4 ரன் எடுத்து தவித்தது. ஷிவம் துபே பந்தில் டிம் டேவிட் (74 ரன், 38 பந்து, 8X4, 5X6) அவுட்டானார்.


கடைசி கட்டத்தில் ஸ்டாய்னிஸ், மாத்யூ ஷார்ட் தொல்லை கொடுத்தனர். ஸ்டாய்னிஸ் 64 ரன்னுக்கு (39 பந்து, 8X4, 2X6) அர்ஷ்தீப் பந்தில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 186/6 ரன் எடுத்தது. ஷார்ட் (26), பார்ட்லட் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

சுப்மன் ஏமாற்றம்: சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடி துவக்கம் தந்தார். அபாட் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்தார். 3 ஓவரில் 30/0 ரன் எட்டியது. எல்லிஸ் பந்தில் அபிஷேக் (25) அவுட்டானார். சுப்மன் கில் (15) நிலைக்கவில்லை. ஸ்டாய்னிஸ் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (24) வெளியேறினார். எல்லிஸ் பந்தில் அக்சர் படேல் (17) நடையை கட்ட, 11.1 ஓவரில் 111/4 ரன் எடுத்து தவித்தது.


வாஷிங்டன் விளாசல்: பின் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா சேர்ந்து திருப்பம் ஏற்படுத்தினர். பவுலிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத வாஷிங்டன், பேட்டிங்கில் ஜொலித்தார். அபாட் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். திலக் வர்மா, 29 ரன் எடுத்தார். அபாட் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஜிதேஷ் சர்மா, வெற்றியை உறுதி செய்தார்.

இந்திய அணி 18.3 ஓவரில் 188/5 ரன் எடுத்து சுலப வெற்றி பெற்றது. அரைசதத்தை நழுவவிட்ட வாஷிங்டன் (49 ரன், 23 பந்து, 3X4, 4X6, ஸ்டிரைக் ரேட் 213.04), ஜிதேஷ் சர்மா (22) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. ஆட்டநாயகன் விருதை அர்ஷ்தீப் சிங் (3 விக்.,) வென்றார். நான்காவது போட்டி நவ. 6ல் நடக்க உள்ளது.

சிறந்த 'சேஸ்'

ஹோபர்ட்டில் சிறந்த 'சேஸ்' பதிவு செய்தது இந்தியா (188 ரன்). முன்னதாக இங்கு அயர்லாந்து அணி 177 ரன் (எதிர், ஸ்காட்லாந்து, 'டி-20' உலக கோப்பை, 2022) 'சேஸ்' செய்திருந்தது.


* ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த சர்வதேச 'டி-20' போட்டிகளில் 3வது சிறந்த 'சேஸ்' (188) ஆனது. முதல் இரு இடங்களில் ஆஸி.,க்கு எதிராக இந்தியா விரட்டிய 198 ரன் (சிட்னி, 2016), 195 ரன் (சிட்னி, 2020) உள்ளன.

* ஒருவர் கூட அரைசதம் அடிக்காமல் அதிக ரன் 'சேஸ்' செய்த அணிகள் பட்டியலில் இந்தியா 2வது இடம் (188) பிடித்தது. முதலிடத்தில் இங்கிலாந்து (197 ரன், எதிர், வெ.இ., பிரிஸ்டல், 2025) உள்ளது.

Advertisement