பா.ஜ.,-அ.தி.மு.க., கூட்டணி; தி.மு.க.,வுக்கு உறுத்துகிறது செல்லுார் ராஜூ சாடல்

மதுரை: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தது தி.மு.க.,வுக்கு உறுத்துவதால் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.

மதுரை சோலையழகுபுரத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மைய பூமி பூஜையில் பங்கேற்ற அவர் கூறுகையில், 30 ஆண்டுகளாகஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்ததை மீட்டு புதிய அங்கன்வாடி அமைக்கப்படவுள்ளது.

இங்குள்ள சுமார் 973 குடியிருப்பு வாசிகளுக்கு தடையில்லா சான்றிதழ் பெற்று பட்டா வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்த வீரவசந்தராயர் மண்டபத்திற்கு கற்கள் எடுக்கும் பணி அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கியது.அது முழுமை பெறாமல் குடமுழுக்கு நடத்தக்கூடாது என ஆன்மிக அன்பர்கள் கருதுகின்றனர்'' என்றார்.

மாலையில் நடந்த ஓட்டுச்சாவடி முகவர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் நிறைந்துள்ளன. ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்கு வெவ்வேறு இடத்தில் ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன.

இறந்தவர்கள், இடம் மாறிச் சென்றவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. போலி வாக்காளர்கள் ஓட்டளிக்க வாய்ப்புள்ளதால் தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்கிறது.

பீஹாரில் இப்பணிகளால்68 லட்சம் இறந்த, இடம் மாறிச்சென்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

தமிழகத்தில்அப்பணிகள் நாளை (நவ. 4) முதல் துவங்கவுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் காலங்காலமாக இடம்பெறும் போலி வாக்காளர்களை நீக்கி விடலாம். தேர்தல் ஆணையம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் தங்கள் வாக்காளர்களை நீக்கிவிடுவார்களோ என தேர்தல் ஆணையம், மத்திய அரசு மீது பழி சுமத்தி, தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றனர். அதற்கு காரணம், பல தொகுதிகளில் போலி வாக்காளர்களை தி.மு.க., ஏற்பாடு செய்துள்ளது.

இச்சூழலில் நடைபெறவுள்ள இப்பணிகள்முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.பூத் லெவல் அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வாக்காளர்களுக்குபடிவங்களை ஒழுங்காக கொடுக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பூத் லெவல் ஏஜன்ட் (பி.எல்.ஏ., 2) க்கு தேர்தல் ஆணையம் அதிகாரம் கொடுத்துள்ளது.

பதவியில் இருப்பவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே உள்ள மனஸ்தாபங்களை வெளிப்படையாக கூற முடியாது. கட்டுக்கோப்பு இருந்தால் தான் 2 கோடி தொண்டர்களைப் பெற்ற கட்சியை சிறப்பாக வழி நடத்த முடியும். கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் அவர்களை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., இருந்தபோதும் நீக்கிவிடுவார்கள். அதைத்தான் தற்போது பழனிசாமியும் செய்துள்ளார்.

தி.மு.க.,வினர் வீட்டிற்குள் சுவாமி கும்பிடுவர். வெளியில் பகுத்தறிவு நாடகமாடுவர். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி சேர்ந்தது அவர்களுக்கு உறுத்துகிறது.

எனவே அ.தி.மு.க., தொண்டர்களின் மனதை குழப்ப முயற்சிக்கின்றனர்.அனைத்து துறைகளிலும் ஊழல் செய்ததால்தான் 60க்கும் மேற்பட்டகவுன்சிலர்கள் இருந்தும் மேயரை நியமிக்க முடியவில்லை.தி.மு.க.,வின் சகாப்தம் இதோடு குளோஸ்.

இவ்வாறு பேசினார்.

Advertisement