தெருநாய்கள் விவகாரம்; தலைமை செயலர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

7

புதுடில்லி: தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற கண்டிப்புக்குப் பிறகு, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் இன்று நேரில் ஆஜரானார். அப்போது, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காக, தமிழகம் உள்ளிட்ட மாநில செயலாளர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர்.

தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக மேற்கு வங்கம், தெலுங்கானா தவிர்த்து, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள் நவ.,3ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கடந்த அக்.,27ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், தலைமை செயலர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களின் தலைமை செயலர்கள் நேரில் ஆஜராகி பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அனைத்து மாநில பிரமாண பத்திரங்களை ஆராய்ந்து ஒருங்கிணைந்த குறிப்பாக கொடுக்கும்படி, வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தெருநாய்கள் கடியைத் தடுக்க மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு கூடுதல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் பழைய உத்தரவு தொடரும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவ.,7ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement