வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு

48

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பணி ஜனநாயகத்துக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாளை முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. இச்சூழலில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என தீர்மானனம் நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் என்.ஆர்.இளங்கோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். பீஹாரில் நடந்த இப்பணிக்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கவில்லை. இச்சூழலில் தமிழகத்தில் இதனை செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது.


தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் இப்பணியை ஏற்க முடியாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல். இதற்கு தடை அல்லது நடவடிக்கை கைவிட வேண்டும். இவ்வறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


இந்த மனு வரும் 6 அல்லது 7ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement