அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் புகார்

1


கோவை: “தி.மு.க.,வில் மட்டுமல்ல, அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல் உள்ளது,” என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்ததால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க.,வில் இருந்து அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி நீக்கினார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், தன்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்து வருகிறார்.


இந்நிலையில், கோவையில், அவர் அளித்த பேட்டி: என் அரசியல் வாழ்வில் ஒரு நாளும் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டது கிடையாது. தற்போது உள்ள பிரச்னைகளை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கும்போது, சில விஷயங்கள் தெளிவாக தெரிகிறது. குடும்ப அரசியல் என்பது, தி.மு.க.,வில் மட்டும் இல்லை; அ.தி.மு.க.,விலும் இருக்கிறது. பழனிசாமியின் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் அரசியலில் தலையெடுத்து வருகின்றனர். இதை பழனிசாமியும் முழு மனதோடு ஆதரித்து வருகிறார். இது நாடறிந்த உண்மை. அ.தி.மு.க.,வில் அவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதை கட்சியில் இருக்கும் நிறைய பேர் அறிந்துள்ளனர். அவர்களெல்லாம் பழனிசாமி மீதும் குடும்பத்தினர் மீதும் கடுமையான வருதத்தில் உள்ளனர்.


என் 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் பயணத்தை பொறுத்தவரை, பல்வேறு கருத்துக்களைப் பரிமாறினாலும், என்னுடைய பணிகளை சரியாக மேற்கொண்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து ஜெயலலிதா காலம் மற்றும் இன்று வரை அ.தி.மு.க., என்ற மாபெரும் இயக்கம் வலுப்பெறவும், வெற்றி பெறவும் தான் தொடர்ந்து முயற்சிக்கிறேன். தன்னால் முடியாத ஒன்றை, முடியும் என வீம்புக்கு சொல்லிவிட்டு, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றக்கூடாது என்பதுதான் என் எண்ணம். இதுவே, பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் அனைவருக்கும் நான் கூறும் ஆலோசனை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement